முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பூஞ்சை

 


துவாரகன்

பூஞ்சை பிடித்த
இந்தக் கன்றுகளுக்குத்தான்
இன்னமும்
நீரூற்றிக் கொண்டிருக்கிறோம்.

எருக்குவியல் கலந்த
வளமான மண்.
ஊற்றுநீரோடி ஊறிய நிலம்.

வீரியமான விதைகளைத்தானே
மண்ணில் ஊன்றினோம்.
இந்த நோய்க்காவிகள்
எங்கிருந்துதான் முளைத்தனவோ?

பூஞ்சை பிடித்த பாகற்காய்
பூச்சி பிடித்த பயற்றங்கொடி
வேராகிய மரவள்ளிக்கிழங்கு

ஒரு கறி வைப்பதற்குக்கூட
முருங்கையிலை ஒடிக்கமுடியாது
மொய்த்துக் கிடக்கின்றன
மயிர்க்கொட்டிகள்.
09022023

கருத்துகள்

  1. முகநூலில் இருந்து..
    Kanapathipillai Varathavel
    மிகவும் சிறப்பான வரிகள். வாழ்த்துக்கள் தம்பி
    Reply1w
    Ahileswaran Sambasivam
    👍
    Reply1w
    Alex Paranthaman
    வெளிப்பார்வைக்கு விவசாயம் சம்பந்தமான கவிதையாகத் தோற்றம் பெற்றிருப்பினும், உள்ளே பல அரசியல் சங்கதிகளைச் சொல்கிறது இக்கவிதை. இச்சங்கதிகளைப் பூடகமாக வெளிப்படுத்தியிருக்கும் விதம் அருமை. வாழ்த்துகள்!
    Reply1w
    Murugàthas Sk
    சிறப்பு
    Reply1w
    Kunarathinam Ilanko
    சிறப்பு
    Reply6d

    பதிலளிநீக்கு
  2. முகநூலில் இருந்து..
    Alex Paranthaman
    pdeSosrtonhg

    சில கவிதைகளை கவிஞன் வெளிப்படையாகவே கூறிவிட முடியும். ஆனால், கூறவேண்டிய விடயத்தைக் கூறித்தான் ஆகவேண்டுமெனில், கவிஞன் தன் பாதுகாப்புக்கருதி இப்படித்தான் வெளிப்படுத்துவான். வெளிப்படுத்த வேண்டும்.
    மேலோட்டமாகப் பார்க்கும்போது, இது ஒரு விவசாயம் சம்பந்தமான கவிதையாகத் தோற்றம் காட்டும். ஆனால், கொஞ்சம் கவனித்துப் படிக்கும்போது.. சமகாலம் இதற்குள் புலப்படுவது புரியும்.
    நல்லதொரு 'குறியீட்டுக் கவிதை'.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காடு

-துவாரகன்- அற்புதங்களையும் ரகஷ்யங்களையும் மறைத்து வைத்திருக்கும் அழகிய உலகம் பொய்யும் கபடமும் இந்தக் காடுகளிடம் இல்லை சிறகுவிரித்து நுழைய நுழைய தன் கரம் நீட்டிக் காப்பாற்றும். இயற்கையிலும் வாழ்க்கையிலும் மோகம் கொண்ட மனிதன் காடுகளைக் கண்டடைந்தான். பசியோடு வந்தவனுக்குப் பரிமாறியது காடு ஜீவராசிகளின் சரணாலயம் ஆகியது காடு உயிர்த்தாதுக்களின் உற்பத்தி மையம் ஆகியது காடு காடுகளில்தான் மனிதன் வேட்டையாடக் கற்றுக் கொண்டான் காடுகளில்தான் மனிதன் போராடக் கற்றுக் கொண்டான் காடுகளில் இருந்துதான் மனிதன் நாடுகளைப் பிடித்தான். வீரர்களைக் காக்கும் விரிந்த உலகானது காடு. நாகரீக மனிதனோ, காட்டில் இருந்து வந்தவனை நாடோடி என்றான். காட்டைச் சூழ்ச்சிகளின் கூடாரமாக்கினான். ஆனாலும், காடுகளே அற்புதங்கள் காடுகளே ரகஷ்யங்களின் பொக்கிஷங்கள் காடுகளே விடுதலையின் வெற்றிகள் 051220100655

உறைந்துபோன கண்கள்

-துவாரகன் சொற்கள் செத்துப்போன கணங்களில் கைகளும் கால்களும் உறைந்தன. கண்கள் உயிரின் பாஷைகளாயின. வெளிச்சத்தில் குறுகவும் அதிசயத்தில் விரியவும் பழக்கப்பட்ட கண்கள் அவை பெருமரத்தின் கீற்றுத் துண்டுகள் உயிர்கொண்ட கணத்தில்... மண்ணும் கல்லும் சாந்தும் குழைத்தெழுந்த சுவர்களுக்கு ஈரத்தோடு உயிர்பிறந்தபோது, மனிதர்களுக்காக கண்கள் பேசத் தொடங்கின. எத்தனை ஜோடிக்கண்கள் பேசின எத்தனை ஜோடிக் கண்கள் துடித்தன எத்தனை ஜோடிக்கண்கள் இரந்தன எத்தனை ஜோடிக் கண்கள் பார்த்துக்கொண்டேயிருந்தன. வாழத்துடிக்கும் ஆசை அந்தக் கண்களில் இருந்தது. கருணையை கையேந்தி இரந்துகொண்டே பலிபீடத்தில் வெட்டுண்டு கிடக்கும் ஆட்டின் குருதியென உறைந்திருந்தன. சுருட்டுப்புகையோடு ஆறுதலாய்க் கதைபேசிச் செல்லும் 'சொக்கன்அண்ணா' ஒருநாள் மாலைக்கருக்கலில் பனையால் விழுந்து செத்துக் கிடந்தபோது கண்கள் மட்டும் விழிந்தபடியே உறைந்திருந்தன. சொற்கள் செத்துப்போன கணங்கள் அவை. குப்பையில் தூக்கிவீசப்பட்ட ஒரு பொம்மையைப் போலவே! 04/2012 ---

யாரிடம் விற்றுத் தீர்ப்பது?

-துவாரகன் துளிர்த்துச் சிலிர்த்துப் பற்றிப் படர்ந்து கிட்ட இருக்கும் கிளைகளெல்லாம் எட்டிப் பிடிக்கின்றன நச்சுக்கொடிகள். அன்று முல்லைக்கொடி படரத் தேர் ஈந்தான் பாரி. இன்று நச்சுக்கொடி படர என்னவெல்லாம் ஈந்தனர் எங்கள் பாரிகள். கொடிசுற்றிப் பிறந்த பிள்ளை குலத்துக்காகாது என்றே கோயிலெல்லாம் சுற்றிப் பிணி நீக்கினாள் எங்கள் பாட்டி. வீட்டில் வளர்த்த மாட்டுக்கு குண்டிப்பக்கம் நாகபடம் உடனே விற்றுவிடு என்றார் அப்பா. உடம்பெல்லாம் நச்சுக்கொடி படரத் திரியும் எங்கள் தனயன்மாரை நாங்கள் யாரிடம் விற்றுத்தீர்ப்பது? கிழவியைத் துகிலுரிந்து பார்ப்பதும் குழந்தையைப் பிரித்துக் கிழிப்பதும் குமரியைச் சிதைத்துக் கொல்வதும் இன்னும்... அப்பனையும் அண்ணனையும் அடித்துக் கொல்வதும் எந்தக் குலத்திலையா எங்களுக்குச் சொல்லித்தந்தார்? நாங்கள் நச்சுக்கொடிகளோடு வாழ்கிறோம். இந்த உலகத்தின் அதிமானிடர் என்று சொல்லிக்கொண்டே. 05/2012