முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நிர்வாண மனிதர்கள்

-          -  துவாரகன்   வெட்கப்படவேண்டியது நீங்கள்தான். உங்கள் நிர்வாணம்தான் வீதியெங்கும் மிதக்கிறது.   மண்ணைக் கிளறி வெற்றிலைக்காவி தெரியச் சிரிக்கும் உ ழைப்பாளியும் உங்களைப் பற்றித்தான் கேலி பேசுகிறான். இதைவிட ஓட்டைச் சிரட்டைக்குள் சீவனை விட்டிருக்கலாம் என்கிறாள் அம்மா.   என் பாட்டனின் கைகளில் இருந்த தளநாரின் வலிமைகூட உங்களிடம் இப்போ இல்லை.   ‘யுரேக்கா’ என்றபடி அவன் வீதியில் ஓடியபோது யாருக்கும் அவனின் நிர்வாணம் தெரியவில்லை.   நாலுகூட்டுக் கச்சேரியான பரிவாரத்திலும் உங்கள் நிர்வாணமே எங்களுக்குத் துலக்கமாயிருக்கிறது.   முற்றும் துறத்தல் என்பதும் சாத்தியமில்லாதபோது, இருளே உமதானது. ஒளியே எமதானது. 13102021 https://vanakkamlondon.com/literature/2021/10/134691/?fbclid=IwAR3rIP-n2qjUAj488bo2MGo57bEdQ7hvJ6p8ALtftoNOxTG5SchABz9SJcw

அறிவாளி அல்லது கூழாங்கற்களால் வால் நிமிர்த்துதல்

- துவாரகன்   இன்னும் எத்தனை காலம்தான் கொம்பு சீவிக் கொண்டிருக்கப் போகிறாய்? இன்னமும் நிமிர்த்த முடியாத வாலோடுதான் இந்தச் செம்பாட்டு மண்ணில் நடந்து திரிகிறாயா?   சுருண்டுபோன புடலங்காய்க்கு ஒரு சிறுகல் போதுமே! நான்கு தலைமுறையாக இந்த நிஷ்டையைக் கலைக்க ஓர் ஒளிப்பொட்டுக்கூடவா உனக்குக் கிடைக்கவில்லை?   இனி மலையைப் பிளக்கவேண்டாம் ஒரு கூழாங்கல்லைத் தேடி எடு எறிவதற்கல்ல. சுருண்டுபோன வாலை நிமிர்த்துவதற்கு. 01102021. நன்றி: https://vanakkamlondon.com/literature/kavithaikal/2021/10/132500/?fbclid=IwAR0OgD5VcrmsiRCniJoK9KxdXUOpemS-5cI1CUvEJhi127p1GL-zJ3K7TLY

என் குழந்தையைக் களவாடியவன்

-        துவாரகன்   மெய்தொட்டு உயிரணைந்து பெற்றபிள்ளை கன்னங்கருவென்ற அழகுக் கண்களுடன் எங்களைக் கட்டிவைத்த உயிர்க்கொடி. எண்ணெய் பூசி தடுக்கில் வளர்த்தியிருந்தபோது அந்தத் திருடன் களவாடி விட்டான்.   நேர்த்திக் கடன் கழித்த சந்நிதியின் வாசலிலே முல்லைச் சிரிப்புடன் கைகளில் தவழ்ந்தது கண்டு அன்பு கொண்டவன். கன்னக்குழியின் அழகுபேசி கதை கேட்டவன்.   சற்று நாங்கள் கண்ணயர்ந்தபோது ஓசைப்படாமல் வந்து களவாடிவிட்டான்.   மார்பிருத்திச் செல்லங்கொஞ்சிய மனது வலிக்க நாட்களை எண்ணிக்கொண்ட பச்சை வயிறு தவிக்க ஊசலாடும் வெற்றுடல்கள் ஆனோம்.   புதியபெயர் சூட்டி புரியாத மனிதரிடம் அகப்பட்ட   என் குழந்தையைக் கண்டீராயின் தேடித் தருவீரோ அன்பரே! 19072021 (தடுக்கு : குழந்தைகளுக்குரிய சிறிய ஓலைப்பாய்) நன்றி : இலக்கியவெளி 2021 https://vanakkamlondon.com/literature/2021/09/131701/?fbclid=IwAR25iiYTqYkdeZLjfH4fIeIrHTKcSktyn7Er59lGDKYmbwVAJCCU_goJ_50