முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மூளை விற்றவர்களின் கதை

-துவாரகன் நான் சிறுவனாக இருந்தபோது அயலூரில் ஒரு மூளைதின்னி இருந்தானென்று அம்மா சொல்வாள். வேகும் பிணத்தின்முன் சுடுகாட்டில் காத்திருப்பானாம். இப்போ மூளை விற்ற மனிதர்களைக் கண்டுகொண்டேன். பறக்கும்தட்டுக் கிரகவாசிகளுக்கு நல்ல விலைக்கு மூளை விற்றவர்கள் செம்மறியாட்டினதும் குரங்கினதும் காண்டாமிருகத்தினதும் மூளைகளை மாட்டிக் கொள்கிறார்கள் சித்தம் கலங்கிப் பேய்களாகிறார்கள் உடையுண்டு நிறமுண்டு கையுண்டு நகமுண்டு காலில்லை பேயென்று என் குழந்தை சொல்கிறது நான் சொல்லிக்கொள்கிறேன் அவர்கள் மூளை கழற்றியவர்கள் என்று நாங்களும் யோசிக்கலாம் எங்கள் மூளைகளை நல்ல விலைக்கு விற்பதுபற்றி…! 08/2011

ங போல் வளை

-துவாரகன் உடல் குறுகு எலும்பை மற கும்பிடு போடு நாணலாய் இரு தவளையாவாய். இனிப்பெனச் சொல் குட்டையைக் குளமாக்கு இன்னும்... ங போல் வளை தமிழ்ப்பாட்டிக்கு நன்றி சொல் நீ துளிர்ப்பாய். 8/2011

யாரோ எங்களைக் களவாடிச் செல்கிறார்கள் -2

-துவாரகன் முகமூடியில்லை குறுவாள் இல்லை சோதரரோடு கைகோர்த்து நிஜத்தில் கூடவே இருக்கிறார்கள் கொள்ளைக்காரர்கள். சிரிப்பைப் பறித்து காட்டேரியிடம் கொடுக்கிறார்கள் நிலத்தைச் சுருட்டி நீளமாய் விரித்துப் படுக்கிறார்கள் குழந்தைகளின் சோற்றை கூட்டாய்க் களவாடுகிறார்கள் இருப்பையும் உணர்வையும் தம் கைகளில் திணிக்கிறார்கள் மூட்டை கட்டியெடுத்தவருக்கு படத்தில் இருக்கும் பாட்டனின் மீசையும் வளையில் செருகிய பாக்குவெட்டியும் உறுத்துகிறது Night museum இரவில் உயிர்ப்பதுபோல் அஞ்சுகிறார் எங்கள் கடவுளரிடமும் இருக்கிறது அவரவருக்கு ஒவ்வொரு பாக்குவெட்டி. 8/2011 (Night museum - சிறுவருக்கான ஜனரஞ்சக ஆங்கிலப் படம். அப்படத்தில் ஒவ்வொரு இரவும் மியூசியத்தில் இருக்கும் எல்லாவற்றுக்கும் உயிர் வந்துவிடும்)