பாம்புகளுக்கு குழந்தைகள் மீது கருணை பிறந்த கதை
-துவாரகன்-
பாறாங்கற்களிலும் தாழைமரங்களிலும்
தம்மை மறைத்துக் கொண்டிருந்த பாம்புகளுக்கு
இப்போ செட்டை கழற்றும் வயசாச்சு.
கண்டவர் அஞ்சும் கோலங்கள் இட்ட
தம் செட்டையை
குழந்தைகளுடன் குதூகலிக்கும் ஆசையில்
கழற்றிக் கொண்டிருக்கின்றன.
பஞ்சுமிட்டாய்க்காரன் போலவும்
பலூன்காரன் போலவும்
பபூன் போலவும்
குழந்தைகளுக்கு ஆசையூட்டிக் கொண்டிருக்கின்றன.
இந்தப் பாம்புகள்தான்
எங்கள் வீடுகளில் நுழைந்து
குழந்தைகளைப் பயமுறுத்தியவை.
இந்தப் பாம்புகள்தான்
எங்கள் குழந்தைகளை
நித்திரையில் தீண்டிவிட்டுப் போனவை.
இந்தப் பாம்புகள்தான்
பிள்ளைகளின் பாற்கலயத்தில்
விசத்தைக் கக்கிவிட்டுப் போனவை.
இடறி வீழ்ந்துகிடந்த எங்கள் பிள்ளைகளை
ஓர்ஆட்டுக்குட்டியைப்போல்
இறுக்கி முறித்துக் கொன்றவையும் இவைதான்.
கொடிய விசத்தை
இரட்டை நாவுக்குள் மறைத்து கொண்டு
இராட்டினத்தில் ஏறி
குழந்தைகளுடன் விளையாட ஆசைப்படும் பாம்புகளுக்கு
இப்போ மட்டும்
இந்தக் கருணை எங்கிருந்து பிறந்ததாம்?
குழந்தைகள் பாவம்
அவர்களை விளையாட விட்ட
தாய்மாரும் ஏதுமறியார்
கபடதாரிப் பாம்புகளே
இனியாவது கொஞ்சம் விலகியிருங்கள்.
191020101207
நன்றி- காற்றுவெளி (மின்னிதழ் டிசம்பர்)
கவிதையின் கருத்து ஒரு பொது எதிரியை உருவகமாக
பதிலளிநீக்குபொதுமைப்படுத்தியுள்ளது. குட்டு யாருக்கு என்பதைத் தெரியப்படுத்துவதில் பூடகம் ஏன்?
மக்கள் விடுதலை முன்னணியே நீ வாழ்க! எண்கள் தாய்மார் பிளைகளுக்காய் வருந்துவது போல் நன்றாகவே நடிக்கிறாய் !
பதிலளிநீக்குஉன் உண்மை முகம் எல்லோருக்கும் தெரியும்
ஓநாய் களே ஆடு நனைகிறதென்று அனுதாபப் படவேண்டாம்
மிக அழகாக சொல்லியிருக்கிறியள் துவாரகன். எனக்கு இந்தக் கவிதை தருகிற உணர்வு மிக ஆழமாக தொடுகிறது. யுத்த காலத்தில் நான் “குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்“ என்று குறிப்பிட்டதின் தொடர்ச்சியாக “பாம்புகளுக்கு குழந்தைகள் மீது கருணை பிறந்த கதை“யை வாசிக்க முடிக்கிறது.
பதிலளிநீக்குபாம்புகளால் குழந்தைகளுக்கு நிகழ்ந்த துயரங்களும் இன்றைய பாம்பின் புன்னகையும் கருணையும் அதன் பயங்கரமும் தெளிவாக புலப்படுகிறது.
அருமையான கவிதை வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குதிரு.துவாரகன்.
பதிலளிநீக்குவணக்கம்.
கவிதைகள் நன்றாக வந்துள்ளன.
வாழ்த்துக்கள்.
'காற்றுவெளி'யில் பிரசுரம் செய்கிறேன்.
தொடர்ந்து எழுதுங்கள்.
நட்புடன்,
முல்லைஅமுதன்
நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஉட்கருத்து எதுவாயினும், இது தனது உணர்வைப் பேசுகிறது என வாசகனை நினைக்க வைத்தால் அது நல்ல படைப்பே. பகிர்ந்துள்ளேன்.
காருண்யன், நிர்மலன்,தீபச்செல்வன்,வேலு,முல்லை அமுதன், டொக்டர் முருகானந்தன், அனைவரின் கருத்துக்களுக்கும் வருகைக்கும் மிக்க நன்றி.
பதிலளிநீக்குமிக மிக அருமை. தொப்பி யாருக்கு பொருத்தமோ அவரவர்கள் அதை அணிந்து கொள்ளட்டும். ஆனால் வாசகர்களை சிந்திக்க வைத்தாலே அப்படைப்பு வெற்றியடைகிறது. உங்கள் படைப்பும் வெற்றியே.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
போருக்குப் பின்னரான தமிழ்ச்சூழல்தான் இக்கவிதையை எழுதத் தூண்டியது.
பதிலளிநீக்கு'விசரன்' என்று பெயர் குறிப்பிட்டுக் கருத்துக் கூறிய நண்பருக்கு நன்றி.