முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அப்போது வானம் எவ்வளவு அழகாக இருந்தது

- துவாரகன் என் அம்மம்மாவின் உலகத்தில் வானம் எவ்வளவு அழகாக இருந்தது. முற்றத்தில் இருத்தி திரளைச்சோறு குழைத்துத் தந்த ஞாபகம். எப்போதும் ஒரு நார்க்கடகத்துடன் நடந்து வருவாள். கறிக்குக் கீரை சாப்பிடப் பழங்கள் மடியில் எங்களுக்காக ஒளித்துக்கொண்டு வந்த பணியாரங்கள். முதல்நாள் இருமியதைக் கண்டு மொசுமொசுக்கையுடன் ‘உறெட்டி’யும் தட்டித் தருவாள் தோடம்பழ மிட்டாய் அவளுக்கு மிகப் பிடிக்கும் தங்கை ‘புஸ்பா’வின் பெயர் அவள் வாயில் வராதெனத் தெரிந்தும் சகோதரர் நாம், சொல்லுமாறு அடம்பிடிப்போம் சாதிச்செருக்கின் மிச்ச வடுக்களையும் தன் குறுக்குக்கட்டில் தழும்புகளாய்ச் சுமந்து கொண்டிருந்தாள். எண்பத்தேழில் எங்கள் வீடெரித்தவனும் அதன் பின் தலைப்பாகையுடன் வந்தவனும் எங்கள் கூடுகளைச் சிதைத்துவிட்டுச் சென்றார்கள் தோட்டம்… வீடு… ஆடு…மாடு… பேரப்பிள்ளைகள் என்ற உலகத்தில் வாழ்ந்த அந்த ஜீவன்கள் நோயுடன் நினைந்து நினைந்து செத்துப் போயினர். ஞாபகமாய் இருந்த ஒரேயொரு அடையாள அட்டைப் படத்தையும் பெருப்பிப்பதற்காக ஒரு ஸ்ருடியோவில் கொடுத்து வைத்திருந்தேன். திரும்பியபே...

வெள்ளாடுகளின் பயணம்

-துவாரகன் ஆட்டுக் கட்டையை விட்டு எல்லா வெள்ளாடுகளும் வெளியேறி விட்டன. கண்ட இடமெல்லாம் வாய்வைக்கும் என்று என் அம்மா ஒரு போதும் வெள்ளாடுகளை வாங்கி வளர்ப்பதில்லை. இப்போ அவை பட்டுப்பீதாம்பரம் போர்த்திக் கொண்டு ஊர் சுற்றுகின்றன. சிதைந்துபோன கொட்டில்களில் தூங்கி வழிவனவெல்லாம் பறட்டைகளும் கறுப்புகளும் கொம்பு முளைக்காத குட்டிகளும் எனக் கூறிக்கொள்கின்றன. தம்மைச் சுற்றிய எல்லாவற்றையும் கண்காணிப்பதற்கும் விடுப்புப் பார்ப்பதற்கும் தம் வீட்டுத்தாயரின் தாவணிகளைப் பங்குபோட்டுக் கொண்டு எஜமானன் போல் வருகின்றன. பட்டுப்பீதாம்பரமும் ஆரவாரமும் நிலையானது என்று இதுவரை யாரும் சொல்லவில்லையே! ஒருவாய்ச் சோற்றுக்கு அல்லாடுபவன் கம்பிமீது நின்றாடும் நிலையில் எங்கள் ஆடுகள். 210920102015 --------- நன்றி- vaarppu.com , காற்றுவெளி (மின்னிதழ்)

பைத்தியக்காரர்களின் உலகம்

-துவாரகன் இந்த உலகமே பைத்தியக்காரர்களால் நிரம்பியிருக்கிறது. மனிதர்களை ஆட்டுவிக்கும் அதிகாரிகளும் ஆயுததாரிகளும் ஆகச் சிறந்த பைத்தியக்காரர்கள். பணத்திற்கும் பகட்டுக்கும் ஒரு கூட்டம் எப்போதும் பைத்தியமாக அலைகிறது. இச்சைக்காகக் கட்டிய கச்சையை இழக்கத் தயாராயிருக்கிறார்கள் காணுமிடமெல்லாம் பைத்தியங்கள். எல்லாம் இழந்தபின் யாரோ ஒரு நல்லவனிடம் கடன்வாங்கிக் கொண்டுவந்த மூவாயிரத்து நானூறு ரூபாவை பிரயாணத்தில் யாரோ களவாடிவிட்டதாக நாடி நரம்பு தளர்ந்து போய் கண்கலக்கிக் கூறினானே ஒரு முதியவன்; அந்தக் களவாணியும் ஒரு பைத்தியம்தான். நான் நடந்து செல்லும் ஒற்றையடிப்பாதையில் உடல் தளர்ந்து ஒட்டடைக் குடிலில் இருந்து ஆசையாய்க் கதைகேட்கும் இன்னொரு முதியவளின் கண்களில் ஒளிந்திருக்கும் அன்பைக் கண்டேன் . எந்தக் கபடமும் அவளிடமில்லை. அவளைப் பைத்தியம் என விரட்டும் என்னைச் சுற்றிய உலகத்தில் இருக்கும் எல்லாருமே பைத்தியங்கள்தான் இப்போ நான் செய்ய வேண்டியதெல்லாம் இந்தப் பைத்தியக்கார உலகிடம் இருந்து என் குழந்தைகளைக் காப்பாற்றிக் கொள்வது மட்டுமே! 200920102244 நன்றி - திண்ணை, காற்றுவெளி