மே 13, 2024

வேர்கள் மறைந்தே இருக்கட்டும்


-துவாரகன்
--------------

வேர்கள் 
எப்போதும்போல் 
மறைந்தே இருக்கட்டும்.
மண்ணின் பிடிமானத்தை விட்டு 
அவை வெளியே வரவேண்டாம்.

கிளைகளின் 
களிநடனம் பற்றியும்
விருட்சத்தின் 
வலிமை பற்றியும்
அவர்கள் 
மனங்குளிரப் பேசுவார்கள்.
தங்கள் வேர்களையும் 
தேடுவதாகத்தான் கூறுவார்கள். 
அத்தனையும் பசப்பு வார்த்தைகள்.

மண்ணும் பெயல்நீரும்
பொத்திவைத்த 
ஆழவோடிய வேர்கள்
வெளியே வரவேண்டாம்.

அவர்களின் குடுவைகளில் இருப்பது 
உயிர்வளர்க்கும் குளிர்நீரல்ல. 
உயிர்வாங்கும் சுடுநீர்.
052024

துவாரகனின் 'அந்தரத்தில் மிதத்தல்' கவிதை சிங்களத்தில்


'அந்தரத்தில் மிதத்தல்' கவிதை சிங்களத்தில்,
நன்றி : இப்னு அஸூமத்

https://www.facebook.com/thuwan.azeez.7/posts/pfbid0291ArJZtaKofHjRS45MAA9fTzYSWDtTFFmnGAiN1LuGhbWof8MjepGxheH2XAwzmJl

 අවකාශයේ පාවීම

-------------------
මමත්වය
යුග මෙන්
ඔසවා ගෙන ආ කාලය
මෙම මිනිසුන්ගේ දෑත්වල රැස්ව ඇත
කුහකකම හොඳ වෙස් මුහුණක්
බලය සපත්තුවකි
ඒවා දන්නේ
කෘමීන් හා තණ කොළය
බල වෙරි මතෙහි
අහස ද වසඟ වේ
කුරුල්ලන් මෙන් පියඹා යන්නට ද පු`ඵවන
පියඹා ගිය ද මැනුම් කළ ද
සිට ගන්නට ආ යුත්තේ මහ පොළවටය
පස් මිනීවළ
ගින්න පවා කා හමාර කරන්නේය
අ`ඵ පවා දියව යන්නේය
කිසිවක් නොමැත කිසිවක්
- තුවාරකන්
- සිංහලෙන් - ඉබ්නු අසූමත්

அந்தரத்தில் மிதத்தல்

 


-துவாரகன்


மமதையை, 
யுகங்களாகச் 
சுமந்துவந்த காலம் 
இந்த மனிதர்களின் கைகளில் சேர்த்திருக்கிறது.

கபடம் நல்ல முகமூடி
அதிகாரம் ஒரு சப்பாத்து
அதற்குத் தெரிவதெல்லாம் 
பூச்சிகளும் புற்களும்தான்.

அதிகார போதையில்
வானமும் வசப்படும் 
சிட்டாய்க்கூடப் பறக்கலாம்.

பறந்தாலென்ன? அளந்தாலென்ன?
நிற்பதற்கு மண்ணுக்குத்தானே வரவேண்டும்.

மண் புதைகுழி. 
தீயும்கூடத் தின்று தீர்த்துவிடும்.
சாம்பல்கூடக் கரைந்துவிடும்.
எதுவுமில்லை எதுவும்.
042024
https://vanakkamlondon.com/news/2024/05/217653/

டிசம்பர் 04, 2023

களவாடப்பட்ட நினைவுகள்

 

-துவாரகன்
நேற்றைய கனவிலென்
புராதன நகரத்தைக் கண்டேன்.
கதவில்லாத கடைகள்
வேலியில்லாத வளவுகள்
குன்றும் குழிகளுமாகிப்போன வீதிகள்
எல்லாவற்றையும்
மக்கள் தங்கள் கதைகளால்
நிரப்பிக் கொண்டிருந்தார்கள்.
இருட்திட்டுக்கள் எல்லாம்
ஒளியால் வழிந்தன.
பஸ்வண்டி,
புராதன நகரம் என்ற பெயர்ப்பலகையோடு
மிடுக்காக வந்து நின்றது.
ராணியம்மா
தன் வியாபாரத் தளபாடங்களோடு
வந்திறங்கினார்.
ஒரு கொண்டாட்ட மனநிலையை
அவர்களிடம் கண்டேன்.
தாங்கள் நட்டுவைத்த மரங்களை...
நினைவுகளை வளர்த்த வீடுகளை...
ஆரத் தழுவினார்கள்.
பெற்றோரைத் தொலைத்த பிள்ளைகள்போல்
சில வீடுகள்
தங்கள் முகங்களைத்
தொங்கப் போட்டுக் கொண்டுநின்றன.
என் இளைய சகோதரன் கேட்டான்.
இந்தப் புராதன நகரத்தின்
பெயர் என்னவென்று.
ஈ. தன் பெயரை மறந்ததுபோல்
நினைவுகள் களவாடப்பட்ட
என் புராதன நகரத்தின் பெயரை
வாழ்ந்தவர் வீழ்ந்தவர் நினைவுகளிலும்
மிஞ்சிய எச்சங்களிலும்
தேடிக்கொண்டிருக்கிறேன்.
112023

நவம்பர் 14, 2023

மறைந்திருக்கும் பறவைகள்

 


-துவாரகன்

வரிசை குலையாத அழகு.
காற்றோடு கலந்த சுகந்தம்.
புத்துயிர்ப்புடன் ஈர்த்திடும் சோலை.
பந்தற்கால் அருகே
நிறுத்திவைத்த துவிச்சக்கரவண்டி.
சற்றுக் கண்ணயர்ந்த நேரம்தான்!
எந்தப் பறவையென்று தெரியவில்லை.
கைப்பிடி, இருக்கை, கைப்பை
அத்தனையும் கழித்துவிட்டுச் சென்றிருக்கிறது.
மிக இரகசியமாக,
அழுக்கைத் தெளிப்பதற்காகவே
காத்திருக்கின்றன
பறவைகளும்.
மனிதர்கள்போலவே!
18092023

துவாரகனின் இரண்டு கவிதைகள்

1.

அறுவடைக் காலம் 

- துவாரகன் 

விதைக்கும்போது

நல்விதை தேடிவிதை 

என்றார் அப்பு. 


ஒரு பூசணி விதையெனினும் 

முற்றிய நல்விதை 

சாம்பல் சேர்த்து 

அடுப்பு முகட்டில் 

பொட்டலமாய்த் தொங்க விட்டார். 

மதர்த்து பூத்து 

காய்த்துக் குலுங்கின

நல் விதைகள்.


எங்கள் காலத்திலும் 

விதைகள் கிடைத்தன. 

பிஞ்சிலே முற்றியவையும் பதர்களும்தான்!


அறுவடை செய்கிறோம்

புற்களும் களைகளும்.


2.

நிறைகுடம் 

- துவாரகன் 

அதிகம் பேசாதே 

சிரித்துக் கதைக்காதே

எப்போதும்

முகத்தை இறுக்கமாக வைத்துக்கொள் 

அறிவாளி. 


மலைமேல் எதுவுமில்லை

எனினும் 

மழை பெய்கிறது

நிறைகுடமாயிரு

புத்திசாலி.


குறைகுடம்கூடத் தளம்பாது 

யாருக்குத் தெரியப்போகிறது

தளம்பாது இரு

நீயும் நிறைகுடம்.

நன்றி : கலைமுகம், 75 ஆவது இதழ்