- துவாரகன் காலநீட்சியின் பின் எனக்கொரு ஊன்றுகோல் கிடைத்திருக்கிறது. மூத்தோருக்கும் காலிழந்த… இடுப்பொடிந்த நண்பருக்கும் மற்றோருக்கும் இயலாதபோது கைகொடுக்கும் ஊன்றுகோல் அல்ல இது. உடையாருக்கு குடை பிடிக்கவும் பக்கப்பாட்டுப் பாடவும் என் முதிர்ச்சிக்கு முன்னரே விசேடமாகக் கிடைத்த ஊன்றுகோல். இதை நன்றாகப் பற்றிக்கொள்ள வேண்டும். திண்ணையில் கதையளக்கும்போதும் அருகிலேயே வைத்துக்கொள்ளவேண்டும். ஊன்றுகோல் பற்றியே இனி கனவுகாணவேண்டும். நடக்கும்போது சேறுபடாமல் பார்த்துக்கொள்ளவும், மிகப் பவித்திரமாக… குளிக்கும்போது அதற்கும் ஒரு நீராட்டு செய்யவும் சிந்திக்கவேண்டும். உக்கிப்போகாதபடி வர்ணம் பூசவும் வெள்ளி முலாமிட்ட கிரீடம் ஒன்றினை அதற்குச் சூட்டிக்கொள்ளவும் ஒருவரின் உதவியை நாடவேண்டும். சமையற்கட்டில் வேலைத்தளத்தில் வாசிகசாலையில் கோயிற் திருவிழாவில் இன்னும்... பொதுமேடைகளில் எனக்குக் கிடைத்த ஊன்றுகோல் பற்றியே இனிப் புகழ்ந்து பேசவேண்டும். காலநீட்சியின்பின் கிடைத்த ஊன்றுகோல் இது. நன்றாகப் பற்றிக்கொள்ளவும் இரவல் கொடுத்திடாது காத்துக்கொள்ளவும் என்னைப் பழக்கப்படுத்தவே...
துவாரகனின் வலைப்பதிவு