முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உனது கடலில் வேறொருவன் நீச்சலடிக்கிறான்

-துவாரகன் உனது கடலை பிரியமுடன் அவளுக்குப் பரிசளித்தாய் புனிதம் என்றார் புன்முறுவல் சேர்த்தார் கடலை விட்டு பெருவீதியில் நடக்க ஆசைப்பட்டாய் வாகன நெரிசலிடை முக்குப்பட்டாய் வானத்தால் பறந்தாவது செல்வேன் என்றாய் குறுக்குவழியே முன்னோர் அனுபவம் முருங்கைக்காய் கட்டும் கறுத்தக்கொழும்பானும் பழைய விதிகள் என்றாய். முனியப்பருக்குப் பதில் முனியப்பரே முன்வந்தார். மரபை மாற்றினாய் சான்றுகளைக் குப்பையில் வீசினாய் கபடமும் அசூசையும் நிறைந்த கள்ளப்பாதையொன்று திறந்தது நீயோ, பாவங்களின் மீதேறிநின்று மமதையுடன் பல்லிளித்துக் கொண்டிருக்கிறாய். அவரவர் கடலில் அவரவர் நீச்சலடிக்க, உனது கடலில் மட்டும் வேறொருவன் நீச்சலடித்துக் கொண்டிருக்கிறான். 02042022 https://vanakkamlondon.comcexvUccumv54

சேற்றில் விழுந்தவன் நறுமணம் பூசுகிறான்

  -துவாரகன் பெரிய மீன்கள் விழுங்கிவிடக்கூடும் என்று சின்னமீன்கள் கரையொதுங்கி மண்ணில் விழுந்து எப்போதாவது தற்கொலை செய்ததுண்டா? நீரலையில் எதிர்த்தோடுகின்றன நீச்சலடித்துத் துள்ளிவிழுகின்றன வாழ்ந்துவிடும் ஆசையோடு  போராடுகின்றன. உன்னைப்போல் சேற்றில் விழுந்து சோரம்போனவனல்ல. வாழும் ஆசை சின்ன மீன்குஞ்சின் துடிப்புடன் இன்னமும் மீதமாயுள்ளது. 29032022 https://vanakkamlondon.com

கரைந்து நீளுதல்

-துவாரகன் சோம்பல் முறித்து எழுந்த சூரியன் மரங்களிடையே ஒளித்து விளையாடுகிறான். யாரோ சிந்திவிட்ட சோற்றுப் பருக்கைகளை எறும்புகள் இழுத்துச் செல்கின்றன. வைக்கோற்போர் அருகே சிதறிய நெல்மணிகளை அணிற்பிள்ளைகள் தேடித் தின்கின்றன. வெறும் குப்பையைக் கிளறி கோழிகளை மேய்த்துக் கொண்டிருக்கிறது கொண்டை வைத்த சேவல். நேற்றைய பூக்களை உதிர்த்துவிட்டிருக்கிறான் காலதேவன். மேசையில் விரித்து வைத்த புத்தகத்தின் பக்கங்கள் நகர மறுக்கின்றன. எந்தச் சலனமுமற்று விடிகின்றது மற்றுமொரு காலைப்பொழுது... அந்தச் சோம்பலைத் துடைத்தெறிகிறது உன்னுடைய மொட்டுச் சிரிப்பு. 18022022 நன்றி : உயிரோடை வானொலி https://www.facebook.com

காலத்தின் ரேகை

- துவாரகன் சோர்வையே அள்ளிக் தெளிக்கும் மம்மல். மனிதர்களின் குரலில்லாத இடைவெளியை வானொலி நிரப்புகிறது. காலில் உரசிக்கொண்டிருந்த பூனையும் வாலைச் சுருட்டிக்கொண்டிருந்த கறுப்பனும் உலாப் போய் விட்டன. புலுனிகள் மட்டும் நாற்சார் முற்றத்தில் குதூகலமாய். உணர்வைத் தொலைத்துவிட்டு மின்மினிகளின் பின்னால் மனிதர்களும் சென்றுவிட்டார்கள். இருளும் ஒளியும் ஒன்றாகிய வாழ்வில் கண்சிமிட்டும் வெளிச்சம் அவளைத் தேற்றப்போவதில்லை. பேர் சொல்லி அழைக்கும் ஒரு குரலுக்காக... அந்தக் கணங்கள் கழிந்து கொண்டிருக்கின்றன. அழுக்கேறிப்போன மேசையில் வலது கையூன்றி இருட்டை வெறித்தபடி இருக்கிறாள். ஒரு காலடியோசை. அவசரத்தில் மூக்குக் கண்ணாடியை எடுத்துப் பொருத்துகிறாள். கைத்தடியைத் தேடி எடுக்கிறாள். தனிமை... அவள் காலடியில் சுருண்டு கிடக்க, காலம், தன் ரேகைகளை அள்ளித் தெளித்துவிட்டுச் சென்று கொண்டேயிருக்கிறது. 02/2022 https://vanakkamlondon.com