- துவாரகன் முன்னோர் புண்ணியத்தை அறுவடை செய்யக் கற்றுத் தந்தனர். நேர்மையைக் கற்றுத் தந்தனர். நாங்களோ, பாவத்தை அறுவடை செய்து கொண்டிருக்கிறோம். நல்ல காற்றைச் சுவாசிக்க மறந்து போனோம். சங்கூர்ந்த நிலங்களை சாம்பல் மேடாக்கினோம். கைவீசி நடந்த கரங்களுக்கு விலங்குகளை இட்டோம். உண்மையையும் நீதியையும் பிணைத்து சவாரி மாடெனச் சாய்த்தோம். சின்னச் சிட்டுக் குருவிக்கு ஒரு சிறாங்கைத் தானியத்தையேனும் விட்டுவைக்க மறந்து போனோம். கவனமாகப் பொலித்தீன் பையினால் சுற்றப்பட்ட உடலைப் பார்த்துக் கொண்டிருக்கும் காலச்சுழலை யார்தான் விரும்பிக் கேட்டார்கள்? வீடு திரும்பிவிடுவோம் என்ற நினைவுடனேயே வைத்தியசாலை வாசலில் கால் பதிக்கிறோம். அந்த நம்பிக்கையேனும் நிச்சயமாக மீதியாக இருக்கட்டும். 11082021 --- நன்றி : பதிவுகள்
துவாரகனின் வலைப்பதிவு