-துவாரகன் பரிபாஷைகளுடன் இருப்பவளிடம் வார்த்தைகளைக் கடன்கேட்கிறார்கள் உதிர்த்த ஒவ்வொரு வார்த்தைக்கும் அளவுகோல் வைத்து ஆராய்ந்தவர்கள் இப்போ உதிர்க்கும் வார்த்தைகளை இரத்தினப் பெட்டிக்குள் பத்திரப்படுத்தி சாமரம் வீசி குதிரையில் ஏற்றிச்செல்லக் காத்திருக்கிறார்கள். அவளின் வார்த்தைகள் பறவைபோல் சிறகடிப்பவை குழந்தைகளின் வண்ணமயச் சட்டைகளில் அழகுகாட்டக்கூடியவை மனிதர்களின் வார்த்தைகள் எப்போதும் தூலமானவை பூடகமானவை எப்போதும் பொய்யானவை எந்நேரமும் கொல்லக்கூடியவை. உயிர்வாழவைக்கும் வார்த்தைகள் எங்கள் கடவுளரிடமும் இல்லை. இப்போ தீர்மானமாயிற்று மனிதர்களுக்கு வார்த்தைகளைக் கடன் கொடுப்பதைப் பார்க்கிலும் ஒரு சிட்டுக்குருவிக்குக் கொடுக்கலாம் என்று. 03/2011 நன்றி : காற்றுவெளி
துவாரகனின் வலைப்பதிவு