ஜூன் 17, 2011

சொற்கள்போல் ஒளியை விழுங்குதல்



-துவாரகன்

இருட்காட்டில் ஒளியைக் கண்டுகொண்டவன்
அதைச் சொற்கள் போல் விழுங்கிவிட்டான்.
சொல்… விழுங்கினால் திக்கும்.
யாருக்கும் எதுவும் புரியாது.

வேடதாரி ஒளியை விழுங்கினான்.
அது தொண்டைக்குழியில்
மீன்முள் போல் சிக்கிக்கொண்டது.

பாட்டன் சொன்ன கதைகள் போல்
கனவுகண்டான்
ஒளி உமிழ்நீரில் கரைந்துவிடும் என்று.
ஒளி இரைப்பையில் சமிபாடடையும் என்று.
குருடன் அடித்த கதையாய் காத்திருந்தான்
ஒளி அசைவற்றுக் கட்டியாகியது.

இன்னமும்
ஆட்டுக்குட்டியை விழுங்கிய
வெங்கடாந்திப் பாம்புடல்போல்
துருத்திக் கொண்டிருக்கிறது ஒளி
06/2011

ஜூன் 04, 2011

தீராக்காதலியின் வினாக்கள்



-துவாரகன்

என் உதட்டுச்சாயம் பற்றியும்
கன்னத்தில் விழுந்து தழுவிக் கொண்டிருக்கும்
கூந்தல்அழகு பற்றியும்
நீ ஏன் இப்போது பேசுகிறாய் இல்லை

என் அன்பும்
தீராக்காதலும்
ஏன் உன்னிடம் தோற்றுப்போகின்றன

என் நகப்பூச்சுக்கே
நாளும் புகழ்ந்து தள்ளும் நீ
நான் பேசும்போதெல்லாம்
வானத்தையும் பூமியையும் பார்த்து
ஏதேதோ பிதற்றுகிறாய்

தீராக்காதலி
அடுக்கடுக்காக
மீளவும் கேட்கத் தொடங்கிவிட்டாள்.

ஜோடிப்புறாக்கள் கொஞ்சிப்பேசும்
அழகுடன் கூடிய
பரிசுப்பொருளுடன்
பேச முடிவுசெய்துவிட்டேன்.

அவளின் கேள்விக் கணைகள்
முழுதாக என்னை மூடும்முன்னே!
06/2011
நன்றி - பதிவுகள்,காற்றுவெளி,யாதும்