-துவாரகன்
--------------
வேர்கள்
எப்போதும்போல்
மறைந்தே இருக்கட்டும்.
மண்ணின் பிடிமானத்தை விட்டு
அவை வெளியே வரவேண்டாம்.
கிளைகளின்
களிநடனம் பற்றியும்
விருட்சத்தின்
வலிமை பற்றியும்
அவர்கள்
மனங்குளிரப் பேசுவார்கள்.
தங்கள் வேர்களையும்
தேடுவதாகத்தான் கூறுவார்கள்.
அத்தனையும் பசப்பு வார்த்தைகள்.
மண்ணும் பெயல்நீரும்
பொத்திவைத்த
ஆழவோடிய வேர்கள்
வெளியே வரவேண்டாம்.
அவர்களின் குடுவைகளில் இருப்பது
உயிர்வளர்க்கும் குளிர்நீரல்ல.
உயிர்வாங்கும் சுடுநீர்.
052024

கருத்துகள்
கருத்துரையிடுக