டிசம்பர் 25, 2009
சர்க்கஸ் கோமாளிகளும் சனங்களும்
-----துவாரகன்
முகப்பூச்சு வேடஉடை ஒப்பனையுடன்
கோமாளிகள் கூத்துத் தொடங்கிவிட்டார்கள்
கூடாரமடித்து
மேளம் கொட்டி
சனத்தைக்கூட்டி
கோமாளிகள் கூத்துத் தொடங்கிவிட்டார்கள்
கோமாளிகளின் கூத்தைப் பார்ப்பதற்கு
யாருக்குத்தான் ஆசையில்லை?
கண்கள் விரித்து ஆச்சரியப்படுகிறார்கள்
கைகொட்டிச் சிரித்து ஆரவாரிக்கிறார்கள்
கயிற்றில் தொங்கும் கோமாளியின்
காற்சட்டையைக் கழற்றுகிறான் ஒரு கோமாளி
கொட்டாவி விட்டவனின் வாயில்
கையோட்டுகிறான் இன்னொரு கோமாளி
பீப்பாவில் வைத்து உருட்டித் தள்ளுகிறான்
மற்றொரு கோமாளி
எல்லாக் கோமாளிகளும்
குரங்குகள் போல் குத்துக்கரணமும் அடிக்கிறார்கள்
கோமாளிகளின் கூத்தைப் பார்த்து
சனங்கள் சிரிக்கிறார்கள்
கோமாளிகளின் கூத்தைப் பார்த்து
சனங்கள் கைகொட்டுகிறார்கள்
கோமாளிகளின் கூத்தைப் பார்த்து
சனங்கள் காசு கொடுக்கிறார்கள்
கூத்து முடிய
கோமாளிகள்
வேடஉடை கழற்றுவர்
வெளியே வருவர்
இன்னும் கூத்துத் தொடரும் என்பர்
கண்கள் விரிய
கைகொட்டிச் சத்தமிட்டு
காசு கொடுப்பதற்கு
இன்னும் இன்னும்
இந்த ஏமாளிச் சனங்கள்
காத்திருக்கிறார்கள்
211220090717
டிசம்பர் 04, 2009
நானும் கொஞ்சம் குப்பை சேர்க்கிறேன்
-----துவாரகன்
இப்போ நானும் கொஞ்சம்
குப்பை சேர்க்கத் தொடங்கி விட்டேன்.
யார் யாரோ கொட்டி வைத்தவற்றையெல்லாம்
பத்திரமாகப் பொறுக்கி எடுத்துக் கொள்கிறேன்.
நந்தவனச் சோலைகளிலும்
பிரசங்க மேடைகளிலும்
திருவிழாக்களிலும்
நான் சேகரித்த குப்பைகளை
சட்டைப் பைகளுக்குள்
பத்திரப் படுத்திக் கொள்கிறேன்.
அவை என் புத்தகங்களையும்
படிக்கும் அறைகளையும் மீறி
சாமியறைகளிலும் நுழைந்து கொள்கின்றன
கொஞ்சம் கொஞ்சமாக குப்பைகளை
மூளையிலும் திணித்துக் கொள்கிறேன்.
தம்பி தங்கை அப்பா அம்மாவுக்கும்
இப்போ நான்தான் வழிகாட்டி
என் தாத்தாவின் மடியிலும் கொஞ்சம்
குப்பை கொட்டி
என் புத்திசாலித்தனத்தை நிரூபிக்கப் போகிறேன்
நானும் ஒரு புத்திசாலி
என் இளவல்களுக்கு வழிகாட்டி
மூளையில் குப்பை நிரப்பிக் கொண்ட
என் நண்பர்களைப் போலவே.
071120092311
நவம்பர் 27, 2009
கடைசி இருக்கையில் வந்தமரும் சின்னப்பறவை
----- துவாரகன்
மண்டபத்தின் கடைசி இருக்கையில்
வந்தமர்கிறது ஒரு சின்னப் பறவை
மனிதர்கள் இல்லாத நாற்காலிகளுடன்
அமைதியே வழிந்து ஒழுகும் மண்டபத்தில்
திறந்த கதவினூடாக
வந்தமர்ந்த அந்தப் பறவை
ஒரு மனிதனைப் போலவே
யோசனையில் ஆழ்கிறது.
ஒரு மரக்கிளை
ஒரு வீட்டு முகடு
ஒரு மின்கம்பம்
எல்லாம் இருக்க
மனிதர்களை இழந்த இந்த
மண்டபத்தில் ஏன்தான் வந்தமர்ந்தது?
தன் இனத்திடம் பகிர முடியாது
நெஞ்சை அடைத்து விம்மும்
சஞ்சலமோ?
மனிதர்களை இழந்த
அந்தக் காலியான கடைசி இருக்கையில்
அந்தச் சின்னப்பறவை வந்தமர்கிறது.
உறவுகளை இழந்து தனித்துப் போன
ஒரு சிறுவனைப்போலவே!
261020092229
அக்டோபர் 02, 2009
-----துவாரகன்
வானத்துக் கதவுடைத்துக் கொட்டிய
பெருமழையில்
வீதிகள் கழுவப்பட்டன.
சேறு வெள்ளம்
நாய் மாடு இறைத்த எச்சங்கள்
எல்லாமே அள்ளுண்டன.
சருகுகள் தடிகள் பெருமழையால்
இழுபட்டன.
மழை பெய்த பின்நாளில்
மண்ணில் மூடுண்ட வித்துக்கள் வெடித்தன.
இளம்பச்சைக் குருத்துக்கள் வெளித்தெரிந்தன
சாணக வண்டுகள் உருண்டு புரண்டன
தம்பளப் பூச்சிகள் ஊர்ந்தன
சரக்கட்டைகள் வீதியைக் கடந்தன
வாரடித்த மண்ணை
மண்வெட்டியால் வழித்தெடுத்தனர் சிலர்
மழை சுத்தப்படுத்திய வெளியில்
கிளித்தட்டு விளையாடினர் சிறுவர்
வீதி அருகில் இருந்து
வெற்றிலை போட்டுத் துப்பினர் பெரியவர்
இது நல்ல மழை என்றனர்
மழையால் வழித்தெடுக்கப்பட்ட எல்லாம்
வீதியால் வழிந்தோடி
பாலங்களுக்கடியில் தேங்கின
குளங்களை நிறைத்தன
எல்லைகள் இழந்த புதிய வீதியை
தம்பளப் பூச்சிகளும்
சரக்கட்டைகளும்
கடந்து செல்கின்றன.
210920092003
நன்றி- கலைமுகம்
செப்டம்பர் 19, 2009
செட்டிக்குளமும் ஒரு பிரெஞ்சு மருத்துவனும்
-----துவாரகன்
வெடித்து விழுந்த மின்னல் வெட்டுக்களிடையே
சிதறித் தெறித்தன உயிர்க்கொடிகள்
முகத்தை விட்டுத்
துள்ளி விழுந்தன கண்கள்
மரங்களின் பொந்துகளிடை
பதுங்கிக் கொண்டன காதுகள்
கைவிரல்கள் மாமரங்களில் தொங்கிக் கொண்டன
கால்கள் தென்னை மரங்களில் தெறித்து வீழ்ந்தன
பிரிந்த குடலிலிருந்து
ஊறிய அரிசியும் பருப்பும்
சிவப்பாய்ச் சிதறின
துடித்துக் கொண்டிருந்த
இதயத்தை
நாயொன்று காவிச்சென்றது
முழுதாய்க் கிடந்த கண்முழிகளை
கோழிகள் கொத்திச் சென்றன
சிதறித் தூவிய தசைப்பிண்டங்களை
எறும்புகள் இழுத்துச் சென்றன.
உயிர்ப்பிச்சைக்கான அவலத்தினிடை
தன் முன்னே பரப்பியிருந்த
இரத்தம் நிரம்பிய உடல்களிலிருந்து
முழுதாக ஒரு மனிதனை
மீண்டும் உருவாக்க
செட்டிக்குளத்தில்…
பிரெஞ்சு மருத்துவனொருவன்
முயன்று முயன்று
தோற்றுக் கொண்டிருக்கிறான்
100520090835
சாத்தான்களின் உலகம்
-----துவாரகன்
மனிதர்களைப் போலவே
வருகின்ற துன்பங்களுக்கும்
கொஞ்சமும் இரக்கமில்லை.
எப்படித்தான்
எல்லாத்துயரங்களும்
ஒன்றாய்த் திரண்டு விடுகின்றன?
சுடுகாட்டில் அடக்கம் செய்ய
ஆயத்தமாகிய பிணத்தின் முன்
கொள்ளிக்குடம் சுற்றிக் கொள்ளும் உணர்வுடனே
எங்களின் காலங்கள் கழிந்து கொள்கின்றன.
இத்துயரங்களைப் போலவே
அதை வருவித்துக் கொள்ளும் மனிதர்களுக்கும் கூட
கொஞ்சமும் இரக்கமில்லை
வீதியில் வாகனத்தின் சில்லுகளிடையே
நசிந்து செத்துப்போன
ஒரு குட்டிநாயின் வாழ்வுபோல்
நாம் வாழும் காலங்களும் செத்துப் போகின்றன.
யாரிடம் சொல்லி ஆற்றுவது
யார் யாரைத் தேற்றுவது
கொல்லும் வீரியத்தோடு
கோரப்பற்களைக் காட்டியபடி
மரணம் முன்னால் வந்து
எக்காளமிட்டுக் கொக்கரிக்கிறது.
மரணத்தின் கூரிய நகங்கள்
எம் தொண்டைக்குழியில் ஆழ இறங்குகின்றன.
அதன் கடைவாய் வழியாகவும்
நாக்குகளின் மீதாகவும்
இரத்த நெடி வீசியபடியே உள்ளது
எங்கும் மரண ஓலம்
எங்கும் சாவின் எச்சம்
எங்கள் வாழ்வுக்காக
இன்னமும் வாழும் ஆசையுடன்
அம்மணமாய் நின்று உயிர்ப்பிச்சை கேட்கின்றோம்.
கைநீட்டி அழைக்கும் கரங்களுக்கு நடுவிலும்
குறிபார்த்தபடி குறுவாள் ஒளிந்திருக்கிறது
இது சாத்தான்களின் உலகம் என்பதால்
கடவுளர்களுக்குக்கூட
வேலையில்லாமற் போய்விட்டது.
300120092005
எல்லாமே இயல்பாயுள்ளன
-----துவாரகன்
எல்லாமே மிக இயல்பாய் உள்ளன.
எதை வேண்டுமானாலும்
தெரிவுசெய்யலாம்.
தெரிவு மட்டும் எனதாய் உள்ளது.
இன்று இருப்பதும்
நாளை இருப்பதைத் தீர்மானிப்பதும்
மிக எளிதாயிருக்கிறது.
சாப்பிடுவது
நடந்து செல்வது
ஆட்களைப் பார்க்கும்போது
எந்தச் சலனமுமில்லாது
ஒரு விளையாட்டுப் பொம்மைபோல்
பார்த்துக் கொண்டேயிருப்பது
எல்லோரும் சிரித்து ஓய்ந்தபின்
ஒப்புக்காக
சிறு உதட்டுப் புன்னகையை
காட்டிவிட்டுப் போவது
எல்லாமே இயல்பாயுள்ளன.
ஒரு கூரான கத்தியோ
ஒரு நீளக் கயிற்றுத் துண்டோ
ஒரு கிணறோ
எனது தெரிவுக்கு மிகப் பொருத்தமானது.
இறைச்சிக்காக கழுத்து இறுக்கப்பட்டு
கதியாலில் தொங்கவிடப்பட்ட
ஒரு கோழியின்
செட்டையடிப்பின் பின்னான
அமைதியும்…
கூடவே கிடைத்துவிடும்.
எல்லாமே மிக இயல்பாய் உள்ளன.
நான் எதை வேண்டுமானாலும்
தெரிவுசெய்யலாம்.
தெரிவு மட்டும் எனதாய் உள்ளது.
160120080637
எங்கள் குழந்தைகள்
-----துவாரகன்
எங்கள் குழந்தைகள்
வீடுகளைத் தொலைத்து விட்டார்கள்
எங்கள் குழந்தைகள்
வீதிகளைத் தொலைத்து விட்டார்கள்
எங்கள் குழந்தைகள்
சிரிப்புகளைத் தொலைத்து விட்டார்கள்
இனியும்
அவற்றைத் தேடிக் கொள்வோம் என்ற நம்பிக்கை
எங்கள் கைகளை விட்டுத்
தூரப் போய்விட்டன.
படகோட்டி தன் துடுப்பைத் தொலைத்து விட்டதுபோல்
இப்போ எங்கள் குழந்தைகளுக்குத் தேவை
வானவில்லும் நட்சத்திரங்களும் அல்ல
நடந்த களைப்புத் தீர
ஒரு முள்ளில்லாப் பற்றை
தாகம் தீர்ப்பதற்குக்
கொஞ்சம் குடிதண்ணீர்
051020082250
காதுகளால் நிரம்பி வழிகின்ற சனங்களின் கதைகள்
-----துவாரகன்
சனங்களின் கதைகள்
காதுகளால் நிரம்பி வழிகின்றன
உள்ளத்தின் பெருத்த பாரங்களாகி
காதுகளை நிரப்பிக் கொண்டு கழுத்தினால் கீழிறங்கி
தோள்மூட்டால் வழிந்து
குதித்தோடுகின்றன சனங்களின் கதைகள்
சனங்களின் கதைகளை ஒரு பாத்திரத்தில்
பிடித்து வைக்கவோ
ஒரு பீப்பாவில் நிரப்பி வைக்கவோ முடியாதுள்ளது.
சீமெண்ட் தரையில் எண்ணெய் வழுக்கலைப்போல்
வழுக்கி ஓடுகின்றன.
வீடு தாண்டி வாசல் தாண்டி
கிராமங்கள் தாண்டி நகரங்கள் தாண்டி
மரங்களின் மீதேறி
வானத்துக் கயிறுகளைப் பிடித்து தொங்கி
விண்ணைத் தாண்டிச் செல்கின்றன.
அதிகமான சந்தர்ப்பங்களில்
இரவில் தூங்கும்போது
வாசலுக்கு வெளியே நின்று முழித்துப் பார்க்கின்றன
ஒரு பெரும் பூதம்போலவும்
கதைகளில் அறிந்த பேய்கள் போலவும்
இதயத்தை இரத்தத்துடன் கையில் தாங்கியும்
உயிரைத் தனியே
ஒரு இரும்புப் பெட்டியில்
வைத்துக் கொண்டும்
கொட்டக் கொட்ட முழித்துப் பார்க்கின்றன.
உயிரியல் ஆய்வு கூடத்து
பாடம் போட்ட மனிதர்களின்
உடல்களைப் போலவும்
இறந்த மனிதர்களின் எலும்புக்கூடுகளைத் தாங்கிக் கொண்டும்
இன்னும் கொஞ்ச சனங்களின் கதைகள்
மைதானத்தில் நிரம்பி வழிவதாகவும்
சில கிரகவாசிகள் சொல்கிறார்கள்.
இந்தக் கதைகள் எல்லாவற்றையும்;
நான் நேசிக்கும் பூனைக்குட்டியினது வருடலில்
நிதானமாக நின்று கேட்க முடியவில்லை.
அவை அதற்கு முன்னரே வழிந்தோடி விடுகின்றன.
ஒரு வாமன அவதாரமாக
இந்த உலகை அளந்தபடியே.
040320092344
தூசி படிந்த சாய்மனைக் கதிரை நாட்கள்
-----துவாரகன்
தூசிபடிந்த சாய்மனைக் கதிரை நாட்களாக
நகர்ந்து கொண்டிருக்கிறது வாழ்வு
கொளுத்தும் வெய்யிலில்
கொட்டித் தள்ளும் இலைகளின் உதிர்ப்பில்
பேய்க் காற்றுத் தாண்டவத்தில்
எல்லாமே அள்ளுண்டபடி
சிவப்பு கறுப்பு பொட்டிட்ட
ஒரு தனியன் வண்ணத்துப்பூச்சி
செழிப்பிழந்து போன
நித்திய கல்யாணிப் பூக்களில்
நம்பிக்கையுடன்
தேடித் தேடித் தேனெடுக்கும் நாதிகூட…
நம் வாழ்க்கையிலிருந்து
மெல்ல மெல்லக் கைநழுவிப் போகிறது.
அதற்கிருக்கும் திராணிகூட
இல்லாமற் போய்விடுமா?
வீதிகளும் வெளிகளும்
வெறுமையாகிப் போன
நம் கதைகளையே
மீண்டும் மீண்டும் சுமக்கின்றன
வரிசை கட்டிக் கொள்வதும்
நேரம் கடத்தும் காத்திருப்பும்
நரம்புகளும் எலும்புகளும் வெளித்தொpயும்
காற்றுப் பைகளாக்குகின்றன.
சொரசொரத்துப் போன கடதாசிப் பூக்களில்
இருக்கும் ஈர்ப்புக் கூட
இந்த நடைப்பிணங்களில் இல்லை
பழுப்பேறிப்போன சோம்பேறி இருட்டில்
மூன்று நாளாக உதறிப் போடாத
அழுக்குப் படிந்த போர்வையுடன்
நேரத்திற்கு நேரம் கம்மிக் கொண்டு
மண் நிரப்பிய சிரட்டையில்
எச்சில் துப்பிக் கொண்டிருக்கும்
இந்தத் தரித்திரத்தை
யாரிடம்தான் கேட்டுப் பெற்றுக் கொண்டோம்?
அழுக்கு மூட்டையாய்
அம்மிக் கொண்டு நீண்டு கிடக்கும்
தூசி படிந்துபோன சாய்மனைக் கதிரையாக
நகர்ந்து கொண்டிருக்கின்றன நாட்கள்
காத்திருப்புக்களின் நடுவே...
பழுத்துப்போன இலைகளாக
உதிர்ந்து கொண்டிருக்கிறது வாழ்வு.
20052007
செப்டம்பர் 18, 2009
நீரின் மட்டம் உயர்கிறது
-----துவாரகன்
முடிவுறாத பயணங்களின் மீதியில்
நீரின் மட்டம் உயர்கிறது
மலைகளையும் காடுகளையும் ஓடைகளையும் தாண்டி
குதித்தோடி வீட்டுக்குள் வருகிறது வெள்ளம்
நீரின் மட்டம் இன்னமும் குறைந்தபாடில்லை
உயர்ந்து கொண்டேயிருக்கிறது.
இருட்டியபடி கொட்டிக்கொண்டிருக்கும்
அடைமழை இணைந்த நாளொன்றில்தான்
நான் என் மாமாவை இழந்தேன்
இருட்டியபடி கொட்டிக்கொண்டிருக்கும்
நாளொன்றில்தான்
என் பால்ய நண்பனையும் இழந்தேன்
இந்த நாட்களில்தான்
குந்தியிருந்த எங்கள் குடிசைகளும்
வெள்ளத்துடன் அள்ளுண்டு போயின.
இந்த நாட்களும் என் இறந்த காலங்களைப் போல்
நிரம்பி வழிகின்றன.
இன்னும் இன்னும் நீரின் மட்டம்
உயர்ந்து கொண்டே செல்கிறது
இன்னும் இன்னும் தலையின் பாரம்
கூடிக்கொண்டே இருக்கிறது
ஓன்றின்மேல் ஒன்றாய்
சிறிதும் பெரிதுமாய்
ஒழுங்கின்றிய அடுக்குகளாய்
நிரம்பி வழிகின்றன
ஒன்றாய்ச் சேர்ந்த துயரங்கள்
ஒரு சாவீட்டில் நிறைந்து வழியும்
துக்க அமைதியைப் போல்
இருட்டியபடி
மார்கழிமாத அடைமழை
கொண்டிக் கொண்டேயிருக்கிறது.
யாரும் வெளியே செல்லமுடியாதபடி!
251120081315
கண்களைப் பற்றி எழுதுதல்
-----துவாரகன்
இந்தக் கண்களுக்கு
எப்போதும் கனவுகள் பலவுண்டு
சிலை செதுக்கும் சிற்பியும்
இறுதியில் திறப்பதும் கண்களைத்தான்
இந்தக் கண்களுக்கு
எப்போதும் கனவுகள் பலவுண்டு
சிலை செதுக்கும் சிற்பியும்
இறுதியில் திறப்பதும் கண்களைத்தான்
கடவுளும் கண்களைத் திறந்தால்
கருணை பொழிவார் என்கிறார்கள்
நாங்கள் எப்போதும் ஒருவர் கண்களை
மற்றவர் பார்த்துக் கொண்டிருக்கிறோம்
சிரிக்கும் கண்கள்
எரிக்கும் கண்கள்
கருணைக் கண்கள்
கயமைக் கண்கள்
கண்காணிக்கும் கண்கள்
கண்டுகொள்ளும் கண்கள்
எல்லாம் கண்கள்தான்
பார்வையில்தான் அப்படி என்ன வித்தியாசம்?
வானில் மிதக்கும் வெண்ணிலாபோல்
இந்த உலகெங்கும் மிதந்து கொண்டிருக்கின்றன
எல்லாக்கண்களும்… எல்லார்மேலும்!
கண்கள் இல்லாது போனால்?
தடவித் தடவி தடுக்கி விழவேண்டியதுதான்.
போகும் இடங்களில் மிகக் கவனமாக
மற்றவர் கண்களைப் பார்த்துக் கொள்ளவேண்டும்
சந்திகளில் வீதிகளிலும்கூட…
கண்களில் அக்கறை கொள்ளவேண்டும்.
கண்களை மட்டுமா?
கைகளை… சைகைகளை...
சிந்தனையை வீட்டில் கழற்றி வைத்துவிடவேண்டும்
தந்திரமும் தப்புதலும் மிக முக்கியம்
இல்லாவிட்டால்
போகிற போக்கில் கண்களைப் பிடுங்கி விட்டு
வீதியில் விட்டு விடுவார்கள்
வெள்ளைப் பிரம்புகூடத் தரமாட்டார்கள்
யார் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன?
இலாப நட்டத்தை யார் பார்க்கிறார்கள்
அவரவர்… அவரவர் பாடு
சும்மா போ
கண்களாவது பிரம்பாவது!
260820071033
மூச்சுக் காற்றால் நிறையும் வெளிகள்
-----துவாரகன்
1
மூச்சுக்காற்றால் நிறைகின்றன
வெளிகள்
எல்லைகள் தாண்டிச் சென்று
இடைவெளிகளை நிரப்பிடாதபடி
கூட்டுக்குள்ளேயே
நிரம்பித் திமிறுகின்றன
கண்ணாடி மீன் தொட்டிகளில்
முட்டிமோதும்
மீன்குஞ்சுகளைப் போலவே!
புதிய மூச்சு
இளைய மூச்சு
முதிய மூச்சு
எல்லாம் நெருக்கியடித்தபடி
ஒன்றையொன்று முட்டிமோதியபடி
அலைகின்றன
சுவரில் மோதித் திரும்பும்
ஒரு பந்தைப்போலவே!
மூச்சுக்காற்றால்
மீண்டும் மீண்டும்
நிறைகின்றன வெளிகள்
இற்றுப்போன
ஓர் இலைச்சருகின் இடைவெளியை
நிரப்பிக் கொள்கிறது
செம்மண்
2
சுவாசத்தின் துவாரவெளிகள் அடைபட்டு
கண்களிலிருந்து வெளியேறுகின்றது மூச்சுக்காற்று
வாயும் காதும் பிருஷ்டமும் என
உடலத்தின் ஓட்டைகளை அடைத்துவிட்டு
இரண்டு கண்களையும் தள்ளிக்கொண்டு
கட்குழிகளிலிருந்து
குருதியுடன் வெளிக் கிளம்புகின்றது மூச்சுக்காற்று
கண்கள் மட்டும் இரு பெரும் முட்டைகள்போல்
நரம்புகளுடன்
முன்னால்
அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கின்றன
கட்குழிகளும் இமைகளும்
கண்களைத் தேடிக்கொண்டிருக்கின்றன
மூச்சுக் காற்று மட்டும்
தன் இஷ்டம்போல்
கண்களால் வெளியேறிக்கொண்டிருக்கிறது.
271220070654
1
மூச்சுக்காற்றால் நிறைகின்றன
வெளிகள்
எல்லைகள் தாண்டிச் சென்று
இடைவெளிகளை நிரப்பிடாதபடி
கூட்டுக்குள்ளேயே
நிரம்பித் திமிறுகின்றன
கண்ணாடி மீன் தொட்டிகளில்
முட்டிமோதும்
மீன்குஞ்சுகளைப் போலவே!
புதிய மூச்சு
இளைய மூச்சு
முதிய மூச்சு
எல்லாம் நெருக்கியடித்தபடி
ஒன்றையொன்று முட்டிமோதியபடி
அலைகின்றன
சுவரில் மோதித் திரும்பும்
ஒரு பந்தைப்போலவே!
மூச்சுக்காற்றால்
மீண்டும் மீண்டும்
நிறைகின்றன வெளிகள்
இற்றுப்போன
ஓர் இலைச்சருகின் இடைவெளியை
நிரப்பிக் கொள்கிறது
செம்மண்
2
சுவாசத்தின் துவாரவெளிகள் அடைபட்டு
கண்களிலிருந்து வெளியேறுகின்றது மூச்சுக்காற்று
வாயும் காதும் பிருஷ்டமும் என
உடலத்தின் ஓட்டைகளை அடைத்துவிட்டு
இரண்டு கண்களையும் தள்ளிக்கொண்டு
கட்குழிகளிலிருந்து
குருதியுடன் வெளிக் கிளம்புகின்றது மூச்சுக்காற்று
கண்கள் மட்டும் இரு பெரும் முட்டைகள்போல்
நரம்புகளுடன்
முன்னால்
அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கின்றன
கட்குழிகளும் இமைகளும்
கண்களைத் தேடிக்கொண்டிருக்கின்றன
மூச்சுக் காற்று மட்டும்
தன் இஷ்டம்போல்
கண்களால் வெளியேறிக்கொண்டிருக்கிறது.
271220070654
செப்டம்பர் 16, 2009
எல்லாமே இயல்பாயுள்ளன
# துவாரகன்
எல்லாமே மிக இயல்பாய் உள்ளன.
எதை வேண்டுமானாலும்
தெரிவுசெய்யலாம்.
தெரிவு மட்டும் எனதாய் உள்ளது.
இன்று இருப்பதும்
நாளை இருப்பதைத் தீர்மானிப்பதும்
மிக எளிதாயிருக்கிறது.
சாப்பிடுவது
நடந்து செல்வது
ஆட்களைப் பார்க்கும்போது
எந்தச் சலனமுமில்லாது
ஒரு விளையாட்டுப் பொம்மைபோல்
பார்த்துக் கொண்டேயிருப்பது
எல்லோரும் சிரித்து ஓய்ந்தபின்
ஒப்புக்காக
சிறு உதட்டுப் புன்னகையை
காட்டிவிட்டுப் போவது
எல்லாமே இயல்பாயுள்ளன.
ஒரு கூரான கத்தியோ
ஒரு நீளக் கயிற்றுத் துண்டோ
ஒரு கிணறோ
எனது தெரிவுக்கு மிகப் பொருத்தமானது.
இறைச்சிக்காக கழுத்து இறுக்கப்பட்டு
கதியாலில் தொங்கவிடப்பட்ட
ஒரு கோழியின்
செட்டையடிப்பின் பின்னான
அமைதியும்…
கூடவே கிடைத்துவிடும்.
எல்லாமே மிக இயல்பாய் உள்ளன.
நான் எதை வேண்டுமானாலும்
தெரிவுசெய்யலாம்.
தெரிவு மட்டும் எனதாய் உள்ளது.
-----------
160120080637
எல்லாமே மிக இயல்பாய் உள்ளன.
எதை வேண்டுமானாலும்
தெரிவுசெய்யலாம்.
தெரிவு மட்டும் எனதாய் உள்ளது.
இன்று இருப்பதும்
நாளை இருப்பதைத் தீர்மானிப்பதும்
மிக எளிதாயிருக்கிறது.
சாப்பிடுவது
நடந்து செல்வது
ஆட்களைப் பார்க்கும்போது
எந்தச் சலனமுமில்லாது
ஒரு விளையாட்டுப் பொம்மைபோல்
பார்த்துக் கொண்டேயிருப்பது
எல்லோரும் சிரித்து ஓய்ந்தபின்
ஒப்புக்காக
சிறு உதட்டுப் புன்னகையை
காட்டிவிட்டுப் போவது
எல்லாமே இயல்பாயுள்ளன.
ஒரு கூரான கத்தியோ
ஒரு நீளக் கயிற்றுத் துண்டோ
ஒரு கிணறோ
எனது தெரிவுக்கு மிகப் பொருத்தமானது.
இறைச்சிக்காக கழுத்து இறுக்கப்பட்டு
கதியாலில் தொங்கவிடப்பட்ட
ஒரு கோழியின்
செட்டையடிப்பின் பின்னான
அமைதியும்…
கூடவே கிடைத்துவிடும்.
எல்லாமே மிக இயல்பாய் உள்ளன.
நான் எதை வேண்டுமானாலும்
தெரிவுசெய்யலாம்.
தெரிவு மட்டும் எனதாய் உள்ளது.
-----------
160120080637
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)