நவம்பர் 28, 2010

யானெவன் செய்கோ?


-துவாரகன்-

அந்தகாரத்தில் ஒலித்து ஓய்ந்துபோன
அந்த ஈன ஒலி
காற்றில் கலந்து கரைந்து போனது.

மெல்ல மெல்ல
மண்ணிலிருந்து எழுந்து
மரங்களில் தெறித்து
வானத்தில் சென்றடங்கிப் போனது.

எது சாட்சி?

ஒரு மரம்
ஓணான், காகம் குருவி
இன்னும்
நான்கு சுவர்களும் பல்லிகளும் சாட்சி.

அந்த வேப்பமர ஊஞ்சல்
அவள்
காற்றில் கூந்தல் விரித்த
கணங்களையும் இழந்து விட்டது.

சுவருக்கும் பல்லிக்கும்
மரத்துக்கும் ஓணானுக்கும்
கடவுள் பேசும் வரம் கொடுத்தால்,
கட்டுண்ட வெளியில் இருந்து
புதையுண்ட மண்ணில் இருந்து
மூடுண்ட அறையுள் இருந்து
இன்னும் கதைகள் பிறக்கும்.

அன்று இசைவோடு ஏமாந்தாள்
குருகு சாட்சியாக.
இன்று அந்தகாரத்தில் அடங்கிப் போனாள்
பல்லியும் ஓணானும் சாட்சியாக.
171120101150
நன்றி- காற்றுவெளி (மின்னிதழ் டிசம்பர்)

நவம்பர் 19, 2010

பாம்புகளுக்கு குழந்தைகள் மீது கருணை பிறந்த கதை


-துவாரகன்-

பாறாங்கற்களிலும் தாழைமரங்களிலும்
தம்மை மறைத்துக் கொண்டிருந்த பாம்புகளுக்கு
இப்போ செட்டை கழற்றும் வயசாச்சு.

கண்டவர் அஞ்சும் கோலங்கள் இட்ட
தம் செட்டையை
குழந்தைகளுடன் குதூகலிக்கும் ஆசையில்
கழற்றிக் கொண்டிருக்கின்றன.

பஞ்சுமிட்டாய்க்காரன் போலவும்
பலூன்காரன் போலவும்
பபூன் போலவும்
குழந்தைகளுக்கு ஆசையூட்டிக் கொண்டிருக்கின்றன.

இந்தப் பாம்புகள்தான்
எங்கள் வீடுகளில் நுழைந்து
குழந்தைகளைப் பயமுறுத்தியவை.
இந்தப் பாம்புகள்தான்
எங்கள் குழந்தைகளை
நித்திரையில் தீண்டிவிட்டுப் போனவை.
இந்தப் பாம்புகள்தான்
பிள்ளைகளின் பாற்கலயத்தில்
விசத்தைக் கக்கிவிட்டுப் போனவை.

இடறி வீழ்ந்துகிடந்த எங்கள் பிள்ளைகளை
ஓர்ஆட்டுக்குட்டியைப்போல்
இறுக்கி முறித்துக் கொன்றவையும் இவைதான்.

கொடிய விசத்தை
இரட்டை நாவுக்குள் மறைத்து கொண்டு
இராட்டினத்தில் ஏறி
குழந்தைகளுடன் விளையாட ஆசைப்படும் பாம்புகளுக்கு
இப்போ மட்டும்
இந்தக் கருணை எங்கிருந்து பிறந்ததாம்?

குழந்தைகள் பாவம்
அவர்களை விளையாட விட்ட
தாய்மாரும் ஏதுமறியார்

கபடதாரிப் பாம்புகளே
இனியாவது கொஞ்சம் விலகியிருங்கள்.
191020101207
நன்றி- காற்றுவெளி (மின்னிதழ் டிசம்பர்)