பிப்ரவரி 19, 2010

இரண்டு கவிதைகள்


1. என்னை நானே சொறிந்து கொள்ளல்
-----துவாரகன்

என் உடம்பை நானே சொறிந்து கொள்ளல்
மிகச் சுகமாக இருக்கிறது
மற்றவரின் முதுகு சொறிந்து கொள்ளலிலும் பார்க்க
இது மிக நல்லது
நாகரிகமானது
மற்றவரின் முதுகு சொறியும்போது
அருவருப்பாக இருக்கும்
தேமல் படர்ந்த தோல்களும்
ஊத்தை நிரம்பிய உடம்புமாக இருக்கும்

மற்றவரின் முதுகை
இவர்கள் எப்படித்தான்
முகம் சுழிக்காமல்
சொறிந்து கொள்கிறார்களோ?

யூன் 2008



2. உருமாற்றம்

குரங்கு தன் உடம்பைச்
சொறிந்து கொள்கிறது.
என்னைப் பார்த்துப் பல்லிளிக்கிறது.
நானும் என் உடம்பைச்
சொறிந்து கொள்கிறேன்.
பல்லிளித்துக் கொள்கிறேன்.
பல்லிளிப்பதாலும் சொறிந்து கொள்வதாலும்
நானும் குரங்காகிட முடியுமா?
நான் நானேதான்.

யூன் 2008