ஆகஸ்ட் 18, 2010

விசப்பாம்புகளின் உலகத்தில் வாழ்தல்


-துவாரகன்-

எப்போதும்
தீண்டுவதற்குத் தயாராகத் தலையுயர்த்திய
பாம்புகளின் உலகத்தில்
வாழச் சபிக்கப்பட்டிருக்கிறோம்.

சதா நாவை நீட்டிக் கொண்டு
புற்றிலும் பற்றை மறைவிலும்
ஆட்களற்ற வெளிகளிலும்
தருணம் பார்த்துக் காத்திருக்கின்றன.

குறிவிறைத்து அலையும் குழுவன்மாடுபோல்
கூட்டுக் கலவியில் களித்திடத் துடிக்கும்
தெருநாய்கள்போல் அலைகின்றன.

பெருந்தெருக்களில்
தம் விஷப்பற்களைக் காட்டி இளிக்கின்றன.
நஞ்சுப் பையை
வாயில் ஒளித்து வைத்துக் கொண்டு
எங்கள் இருக்கையையும் படுக்கையையும்
பங்கு கேட்கின்றன.

பக்கத்தில் புற்றிருந்தும்
கொல்வதற்குத் தடியிருந்தும்
பாம்புக்குப் பால்வார்க்கும் உத்தமர்களோடு
ஒன்றும் இயலாத குஷ்டரோகிகளாக
சுற்றியிருக்கின்றனர் மனிதர்.

இது பாம்புகளின் உலகம்
அதில் நாங்கள் வாழச் சபிக்கப்பட்டிருக்கிறோம்.
160820102225