ஜனவரி 20, 2011

மழைநீரில் கரைந்துபோகும் கண்ணீர்த்துளிகள்


-துவாரகன்

துயரத் தொடர் கதைக்கு
அளவேது

வெள்ளக் காட்டிடையே
நீரைக் கிழித்துச் செல்கிறது வண்டி
மழைநீரும் கடலும் இணையும் ஓரத்தில்
அடுக்கடுக்காய் குச்சிக் குடிசைகள்
மழையில் நனைந்த காக்கைகள்போல்.

தலையில் மழைநீர் சொட்டச் சொட்ட
நைந்துபோன நூல்சேலையுடன்
சங்கடப்பட்டபடி முக்காடு போட்ட தாய்.

கூடவே பயணித்தாள் அந்தச் சிறுமி
அவளைவிடப் பெரிய சட்டையுடன்.
தலையில் நிறங்கலைந்து போன நீல ‘வூல்பாண்ட்’
வெளியே றபர் தொங்கிக் கொண்டிருந்தது
காய்ந்து கறுத்துப்போன முகம்
வழித்திழுக்கப்பட்ட தலை
நீர் சொட்டிக்கொண்டிருந்தது.
கையில் ஒரு காய்கறிக் கூடை
மழையில் நனைந்த கைகள் நடுங்கின
‘என்ன நல்லா நனைஞ்சிட்டீர்போல… நடுங்குதோ?
சின்னப் புன்முறுவலுடன் தலையாட்டினாள்

குச்சிக் குடிசையும்
அவளைவிடப் பெரிதான சட்டையும்
அந்தச் சின்னச் சிரிப்பின் பின்னால்
ஒளிந்திருக்கக் கண்டேன்.
160120110705

(ஒரு மழைநாளில் குச்சவெளி புல்மோட்டை பிரதேசத்தினூடாகப் பயணம் செய்தபோது ஏற்பட்ட அனுபவம்)
நன்றி - உதயன் /காற்றுவெளி

6 கருத்துகள்:

  1. மழை வெள்ளம் பற்றி தினம் தினம் படித்துக் கொண்டேயிருந்தோம்.
    அவை செய்திகள்
    இந்தச் சிறுமியின் நனைந்த சிரிப்பு
    வெள்ளத்திலும் வேகமாக
    உள்ளத்தை அள்ளிக்கொண்டே போகிறது.

    பதிலளிநீக்கு
  2. அந்தச் சிரிப்புத்தான் என்னைக் கவர்ந்தது. நன்றி டொக்டர்.

    பதிலளிநீக்கு
  3. தங்கள் கவிதை "நந்தலாலா இணைய இதழி"ல் வெளியாகியுள்ளது!! வாழ்த்துக்கள்!! தொடர்ந்து எழுதுங்கள்!!

    பதிலளிநீக்கு
  4. அருமையான வரிகளைப் பகிர்ந்ததற்கு நன்றிகள்...

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    காதல் கற்பித்த தமிழ் பாடம்

    பதிலளிநீக்கு
  5. நந்தலாலாவின் எனது கவிதை பிரசுரமானது கண்டேன். அத்தோடு வல்லைவெளி வலைப்பதிவுக்கும் இணைப்புக் கொடுத்துள்ளீர்கள். இரண்டுக்கும் எனது மேலான நன்றி.

    பதிலளிநீக்கு
  6. மதிசுதா வரவுக்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு