அக்டோபர் 31, 2010
அப்போது வானம் எவ்வளவு அழகாக இருந்தது
-துவாரகன்
என் அம்மம்மாவின் உலகத்தில்
வானம் எவ்வளவு அழகாக இருந்தது.
முற்றத்தில் இருத்தி
திரளைச்சோறு குழைத்துத் தந்த ஞாபகம்.
எப்போதும் ஒரு நார்க்கடகத்துடன்
நடந்து வருவாள்.
கறிக்குக் கீரை
சாப்பிடப் பழங்கள்
மடியில் எங்களுக்காக ஒளித்துக்கொண்டு வந்த
பணியாரங்கள்.
முதல்நாள் இருமியதைக் கண்டு
மொசுமொசுக்கையுடன் ‘உறெட்டி’யும் தட்டித் தருவாள்
தோடம்பழ மிட்டாய்
அவளுக்கு மிகப் பிடிக்கும்
தங்கை ‘புஸ்பா’வின் பெயர்
அவள் வாயில் வராதெனத் தெரிந்தும்
சகோதரர் நாம், சொல்லுமாறு அடம்பிடிப்போம்
சாதிச்செருக்கின் மிச்ச வடுக்களையும்
தன் குறுக்குக்கட்டில் தழும்புகளாய்ச்
சுமந்து கொண்டிருந்தாள்.
எண்பத்தேழில் எங்கள் வீடெரித்தவனும்
அதன் பின் தலைப்பாகையுடன் வந்தவனும்
எங்கள் கூடுகளைச் சிதைத்துவிட்டுச் சென்றார்கள்
தோட்டம்… வீடு…
ஆடு…மாடு…
பேரப்பிள்ளைகள் என்ற
உலகத்தில் வாழ்ந்த அந்த ஜீவன்கள்
நோயுடன் நினைந்து நினைந்து செத்துப் போயினர்.
ஞாபகமாய் இருந்த
ஒரேயொரு அடையாள அட்டைப் படத்தையும்
பெருப்பிப்பதற்காக
ஒரு ஸ்ருடியோவில் கொடுத்து வைத்திருந்தேன்.
திரும்பியபோது அதுவும் முகாமாக இருந்தது.
வருடத்தில் ஒருநாள்
அம்மா படைக்கும்போது
‘இது அம்மம்மாவுக்கு’ என்பாள்
திரளைச் சோறு ஊட்டி
எம்மை வளர்த்த
அந்தக் கணங்கள்
எங்கள் வாழ்வின் பொற்காலங்கள்.
அதிகாரமும் ஆணவமும் வந்து
எல்லாவற்றையும் அள்ளிச் சென்றுவிட்டுவிட்டது.
அப்போது
வானம் எவ்வளவு அழகாக இருந்தது.
071020101052
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அனுபவபூர்வமான மனதைத் தொடும் கவிதை. அதிகாரமும் ஆணவமும் எங்கிருந்து வந்தாலும் அவை கண்டிக்கப்பட வேண்டியவைடயே.
பதிலளிநீக்குஎமது சமூகத்தின் சாதிய ஆணவம் என்று அழியுமோ?
எண்பத்தேழில் எங்கள் வீடெரித்தவனும்
பதிலளிநீக்குஅதன் பின் தலைப்பாகையுடன் வந்தவனும்
எங்கள் கூடுகளைச் சிதைத்துவிட்டுச் சென்றார்கள்
அருமையான வரிகள். ஆனால் தலைப்பாகைகள் என்பது முற்றிலும் தவறானது. அவர்களும் எங்களைப்போல ஒரு நசுக்கபபட்ட இனமே. மட்ராஸ் ரெஜிமென்டால் நசுக்கபட்டவர்கள். மற்றும்படி தலைப்பாககைள் என்பது முற்றிலும் இந்தியா ஆகிவிடாது. பின்புலத்தில் வெறு சமூகமே இருந்தது.
ஆனால் இன்று சீக்கிய சமூகம் இருக்கும் நிலையில் இன்னும் 10-15 வருடங்களில் எமது சமூகம் இருக்கும். (சிறிலங்கா எனது தாய்நாடுஎன்று கொண்டு)
அனுபவபூர்வமானதென்பதில் உண்மை இருக்கிறது டொக்டர். தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.
பதிலளிநீக்குநண்பர் வெண்காட்டான் அவர்களுக்கு,
பதிலளிநீக்குஇக்கவிதையில் 'தலைப்பாகை' என்பதை குறியீடாகத்தான் பயன்படுத்தினேன். அப்போது சாதாரணமாக கதைக்கும்போது மக்கள் அவ்வாறுதான் குறிப்பிட்டார்கள். நானும் புரிந்து கொள்கிறேன். எதிர்காலத்தில் கவிதைகளைத் தொகுப்பாக்கும்போது மேலும் செம்மைப்படுத்துவேன். தங்களுக்கு மிக்க நன்றி.
வெண்காட்டான் சொல்வது மிகவும் சரி. தலைப்பாகைகள் என்பது முழு இந்தியா ஆகிவிடாது. கூடவே கூர்க்கா அல்லது நாகலாந்து சிப்பாய் என்றுகூட எழுதியிருக்கலாம். ஆனால் ஒன்று பாருங்கள் அநேகமான நாடுகளில் விளிம்புநிலை சமூகங்களிலிருந்தே புறக்கணிப்பு, அல்லது பிழைப்புக்கு மாற்றுவழியில்லாத நிலையில்தான் சிப்பாய்களாகிறார்கள்.( இது போராளிகளுக்கு மட்டுமல்ல ஜேவிபியினருக்கும்கூட ஒரு பின்னம் பொருந்தும்.)
பதிலளிநீக்குஇங்கு தலைப்பாகை என்பது இந்திய சமாதனப்படையின் ஒரு குறியீடுதான். இவ்வாறாக ஒரு கவிதையின் ஒவ்வொரு வார்த்தையையும் தனித்தனி பிரித்து நோண்டிப்பார்ப்போமாயின் கவிதையின் உயிரை ஸ்பரிசிக்கமுடியாலாகிவிடும்.
காருண்யன் கொன்ஃபூஸியஸ்.
கருத்துக்கள் செம்மைப்படுத்தவும் ஊக்கப்படுத்தவும்தானே. மூர்த்தி அவர்களுக்கும் மிக்க நன்றி.
பதிலளிநீக்கு@ponnia:தமிழ் போரட்டம் விளிம்பு நிலை மக்களில் இருந்து வரவில்லை. வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களும் இருக்கிறார்க்ள. அரசாங்கம் கூறுவது போல அவர்கள் கிழக்கை மட்டும் சேர்ந்தவர்கள் அல்ல.
பதிலளிநீக்குஅதே வேளை விளிம்பு நிலை மக்களே அதிக துன்பத்தையும் அனுபவித்தவர்களாகவும் பணத்திற்கும் பதவிக்கும் விலைபோகதவர்கள்.
தமிழ்ர்களின் முக்கிய பலகீனமே எதையுமே சுயமாக சிந்திக்கும் குணம் அற்றதுதான். போராளிகள் யாவரும் பிளைப்புக்கு வழியற்று போனவர்கள் இல்லை.. அப்படிபட்டவர்களால் தியாகம் செய்ய முடியாது.
சீக்கியரும் எம் மக்களைபோல ஒடுக்கப்டர்வகளே. ஆனால் தற்போது அதை முற்றாக மறக்கடிக்பட்டடுவிட்டார்கள். கவிதையில் பிழைகசொல்லவில். நானும் இந்தியா என்றால் அவர்கள் தான் என்ற கருத்துதான் இருந்தது. ஆனால் அவர்கள் அல்ல. நாகாலந்து கூர்காவுமல்ல. அவர்கள் படும் பாடு அங்கு போய் பார்தால்தான் தெரியும். இந்தியா அதிகாரவர்க்கம் என்பது குறிப்பிட்ட உயர்சாதியினரும் அவர்கின் விசுவாசமான மலையாளிகளுமே ஆகும். அவர்களு இங்கு குறிப்பிப்பட வேண்டியவர்கள். மலையாளிகளுக்கு என்றுமே தமிழ்ாகள் மீது பரிவோ பாசமோ கிடையது. மாறாக ஒரு வித இன ரீதியான வெறுப்பே உண்டு. தமிழ்நாட்லி்.இருந்தால் தெரிந்திருக்கும்.
பதிலளிநீக்குஅகதி ஈழத்தமிழருக்கு விமான நிலையங்களில் அவர்கள்க கொடுக்கும் துன்பம் நிங்கள் அறியதது அல்ல.
//முதல்நாள் இருமியதைக் கண்டு
பதிலளிநீக்குமொசுமொசுக்கையுடன் ‘உறெட்டி’யும் தட்டித் தருவாள்
தோடம்பழ மிட்டாய்
அவளுக்கு மிகப் பிடிக்கும்//
வரிகளில் எதார்த்தம்..கவிதையை ரசிக்கச்செய்கிறது. வாழ்த்துக்கள்
மதுரை சரவணன், வருகைக்கு மிக்க நன்றி.
பதிலளிநீக்கு