-துவாரகன்
சோம்பல் முறித்து எழுந்த சூரியன்
மரங்களிடையே ஒளித்து விளையாடுகிறான்.
யாரோ சிந்திவிட்ட சோற்றுப் பருக்கைகளை
எறும்புகள் இழுத்துச் செல்கின்றன.
வைக்கோற்போர் அருகே
சிதறிய நெல்மணிகளை
அணிற்பிள்ளைகள் தேடித் தின்கின்றன.
வெறும் குப்பையைக் கிளறி
கோழிகளை மேய்த்துக் கொண்டிருக்கிறது
கொண்டை வைத்த சேவல்.
நேற்றைய பூக்களை
உதிர்த்துவிட்டிருக்கிறான் காலதேவன்.
மேசையில் விரித்து வைத்த
புத்தகத்தின் பக்கங்கள்
நகர மறுக்கின்றன.
எந்தச் சலனமுமற்று
விடிகின்றது
மற்றுமொரு காலைப்பொழுது...
அந்தச் சோம்பலைத்
துடைத்தெறிகிறது
உன்னுடைய மொட்டுச் சிரிப்பு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக