செப்டம்பர் 18, 2009
நீரின் மட்டம் உயர்கிறது
-----துவாரகன்
முடிவுறாத பயணங்களின் மீதியில்
நீரின் மட்டம் உயர்கிறது
மலைகளையும் காடுகளையும் ஓடைகளையும் தாண்டி
குதித்தோடி வீட்டுக்குள் வருகிறது வெள்ளம்
நீரின் மட்டம் இன்னமும் குறைந்தபாடில்லை
உயர்ந்து கொண்டேயிருக்கிறது.
இருட்டியபடி கொட்டிக்கொண்டிருக்கும்
அடைமழை இணைந்த நாளொன்றில்தான்
நான் என் மாமாவை இழந்தேன்
இருட்டியபடி கொட்டிக்கொண்டிருக்கும்
நாளொன்றில்தான்
என் பால்ய நண்பனையும் இழந்தேன்
இந்த நாட்களில்தான்
குந்தியிருந்த எங்கள் குடிசைகளும்
வெள்ளத்துடன் அள்ளுண்டு போயின.
இந்த நாட்களும் என் இறந்த காலங்களைப் போல்
நிரம்பி வழிகின்றன.
இன்னும் இன்னும் நீரின் மட்டம்
உயர்ந்து கொண்டே செல்கிறது
இன்னும் இன்னும் தலையின் பாரம்
கூடிக்கொண்டே இருக்கிறது
ஓன்றின்மேல் ஒன்றாய்
சிறிதும் பெரிதுமாய்
ஒழுங்கின்றிய அடுக்குகளாய்
நிரம்பி வழிகின்றன
ஒன்றாய்ச் சேர்ந்த துயரங்கள்
ஒரு சாவீட்டில் நிறைந்து வழியும்
துக்க அமைதியைப் போல்
இருட்டியபடி
மார்கழிமாத அடைமழை
கொண்டிக் கொண்டேயிருக்கிறது.
யாரும் வெளியே செல்லமுடியாதபடி!
251120081315
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக