- துவாரகன்
உனக்கு
பத்துக் கட்டளைகள்
கற்றுத்தர
ஆசைப்படுகிறேன்.
முதலில்
பல்லிளிக்கக்
கற்றுக்
கொள்ளவேண்டும்.
பின்னர்
எண்ணெயில்லாமல்
பந்தம்
பிடிக்கவேண்டும்.
இன்னமும்
அவர்கள்
நடக்கும்போது
வால்
நிலத்தில் படிந்து அழுக்காகாமல்
பார்த்துக்
கொள்ளவேண்டும்.
வீட்டுச்
சுவருக்கு
கூலியில்லாமல் வர்ணம்
பூசவும்
மதிய
இடைவேளையில்
ஏற்றியிறக்கவும்
பழகிக்
கொள்ளவேண்டும்.
தேவைப்படும்போது
உன்
மூளையை கழற்றிவைத்துவிட்டு
கோயில்
மாடுபோல்
எல்லாவற்றுக்கும் ஆட்டவேண்டும்.
தாவவும்
தழுவவும் தட்டிக்கொடுக்கவும்
தெரிந்திருத்தல்
வேண்டும்.
மிக
முக்கியமாக,
குதிரையேற்றம்
பழகியிருத்தலும்
அந்தரவேளைகளில்
உனக்கும்
அவர்களுக்கும்
உதவியாய்
இருக்கக்கூடும்.
என்ன
பத்துக் கட்டளைகளும் சரிதானே?
அப்படியானால்,
கதவைத்
திறந்து
நீ
உள்ளே வரலாம்.
25102021.
https://vanakkamlondon.com/literature/kavithaikal/2021/10/136245/?fbclid=IwAR1EyihJxZfF3FUO2bpSQuYoAL4BxCv-wnJgnjzY-ODWiJztPU9pWlIVFsk