டிசம்பர் 08, 2013

வெற்றுப் போத்தல்களும் கச்சான் கோதுகளும்



- துவாரகன்

எல்லாம் கழுவித் துடைத்தாயிற்று
எல்லாம் பூசி மெழுகியாயிற்று
இரத்தக்கறை
உருச்சிதைவு
துருத்தும் சுவடு
எல்லாம்
கடின உழைப்பில் முடிந்தாயிற்று

நீ இன்னும்
கனவுகளையும் நினைவுகளையும்
காவித் திரிகிறாய்
சித்தங் கலங்கியிருக்கிறாய்
செத்த பிணத்தின் நினைவைச் சுமந்திருக்கிறாய்
உன் பிஞ்சின் சிதறலை அள்ளி
மடியில் வைத்துக் கொண்டிருக்கிறாய்

நான் தந்துள்ள
வண்டின் ரீங்காரத்தையும்
செல்லங் கொஞ்சுங் கிளிகளையும்
கண் சிமிட்டும் மின்மினிப் பூச்சிகளையும்
ஏற்க மறுக்கிறாய்

திருவிழாவில்
மிஞ்சிப் போனவை
வெற்றுப் போத்தல்களும்
கச்சான் கோதுகளுமே

ஆட்காட்டிக் குருவியொன்று
சத்தம் போட்டுச் சொன்னது.
10/2013

அக்டோபர் 24, 2013

வெள்ளாடுகள்




-துவாரகன்

இந்த ஆடுகளை என்னதான் செய்வதாம்
எப்படித்தான் சாய்த்துச் சென்றாலும்
வழிமாறிவிடுகின்றனவே?

ஆடுகளிலே ஆவலாதிப்படுவன
இந்த வெள்ளாடுகள்தானாம்!

அம்மம்மா சொல்லுவா…
‘சரியான பஞ்சப் பரதேசிகள்’ என்று
கண்டதெல்லாத்திலயும் வாய் வைக்குங்கள்
முருங்கையில ஒரு பாய்ச்சல்
பூவரசில ஒரு தாவல்
பூக்கண்டில ஒரு கடி
மேய்ச்சல் தரவையில சரியா மேயாதுகள்

இந்த ஆவலாதிப்படும் ஆடுகளை
என்னதான் செய்வதாம்?
சத்தம் போடாம
கட்டையில கட்டவேண்டியதுதான்.
10/2013

ஆகஸ்ட் 31, 2013

அது அவர்களின் உலகம்



-துவாரகன்


அழு
வாய்விட்டு அழு
கண்ணீர் தீரும்வரை அழு
நெஞ்சடைக்கும் பாரம் குறையும்வரை அழு

உன் உண்மை முகத்திலிருந்தும்
ஈரம் நிறைந்த உள்ளத்திலிருந்தும்
எழுந்து வரும் கண்ணீரும் ஓலமும்
உனக்கான உலகம் என்றாகிவிட்டது.

அது அவர்களின் உலகம்
அந்த உலகின் சொற்கள் நஞ்சூறியவை
அந்த உலகின் முகங்கள் போலியானவை
அதில் நீ சஞ்சரிக்கமுடியாது.

உன் ஓலம்…
ஒரு பறவையின் சிலுசிலுப்பு மட்டுமே.

மரத்துப்போனவர்கள்!
08/2013

மே 28, 2013

முதுமரத் தாய்


- துவாரகன்

அடங்க மறுத்து
ஆர்ப்பரிக்கும் அலைகளாக
தீர்ந்து போகாத நினைவுகள்

வாழ்வின் இறுதி மணித்துளிகள்
அந்த விழிகளுக்குள்
இறுகிப்போயின.
சிறகடிக்கும் ஆசைகள்
மண்ணோடு மண்ணாய்
இற்றுப்போயின.

தளர்ந்து செதிலாகிப் போன
கால்களை நீட்டியபடி
இன்னமும் தீர்ந்து போகாத
அந்த நினைவுகளோடு
காத்திருக்கிறாள்
முதுமரத் தாயொருத்தி.

அறுந்துபோன செருப்பைத்
தூக்கியெறிந்து விட்டு செல்வதுபோல்
எல்லோரும்
அவளைக் கடந்து கொண்டிருக்கிறார்கள்.
2013/05

மே 17, 2013

ஒரு வார்த்தை





மூச்சுமுட்டி நெஞ்சடைக்கும் துயரோடு
வாய்விட்டு அழுபவரை
ஏனழுகிறாய் என்று கேட்பதற்கு
இந்த உலகில் ஒரு மனிதராவது வேண்டும்.


இன்னமும் ஆயிரம் ஆயிரம்
தளைகளோடும் தழும்புகளோடு
வாழ்வதற்கு சபிக்கப்பட்டோமா?

ஜனவரி 04, 2013

கொம்பு முளைத்த மனிதர்கள்


- துவாரகன் 

புதிய நட்சத்திரங்கள்
வானத்தில் மின்னத்தொடங்கிய காலம்முதல்
வீதியில் நடந்து கொண்டிருந்த மனிதர்களுக்கு
கொம்பு முளைக்கத் தொடங்கியது.

கோயிற் கச்சான் கடையில்
விற்பனைக்கு வைத்த
மிருகங்களின் வால்களையும் காதுகளையும்
விருப்பமானவர்கள் அணிந்து கொண்டார்கள்.

மாடுகள் போலவும்
நரிகள்போலவும்
நாய்கள் போலவும்
குரங்குகள் போலவும்
ஓசையிடக் கற்றுக்கொண்டார்கள்.

தாவரங்களையும் கிழங்குகளையும்
தின்னத் தொடங்கினார்கள்.
ஆற்றில் நீர் குடிக்கவும்
சுவடறிந்து இடம்பெயரவும்
இரைமீட்கவும்
பழகிக் கொண்டார்கள்.

வீடுகள் எல்லாம் வெறிச்சோடின.
காடுகள் எல்லாம்
புதிய மிருகங்களால் நிரம்பி வழிந்தன.

உண்மை மிருகங்களின்
கொம்புகளும் காதுகளும்
உதிர்ந்து கொண்டிருக்க,
மீண்டும்
வால்கா நதிக்கரையில் இருந்து
கூன் நிமிர்த்தியபடி நடந்து வருகிறார்கள்
புதிய மனிதர்கள்.
01/2013