ஆகஸ்ட் 09, 2012

நகரம்



                                      -துவாரகன்

வண்ணமாய் மின்னும் நகரம்
அதிகமும் பைத்தியக்காரர்களால் நிரம்பியிருக்கிறது.

ஏவிவிடப்படும் இயந்திரமனிதர்கள்போல்
யார் யாரோவெல்லாம்
இந்த மனிதர்களை இயக்குகிறார்கள்.

கடமைக்கு விரைந்தவன்
கூவிக்கூவி விற்ற கடதாசிப் பூக்களை
விலைபேசிக் கொண்டிருக்கிறான்.

கழுத்துப்பட்டி சப்பாத்து
அட்டைகள் பத்திரங்களுடன்
பூவரசவேலிக்குள் ஓடாகிப் போன மனிதர்களை
ஏமாற்றப் புறப்படுகிறார்கள்
இன்னுஞ்சிலர்.

மூச்செடுக்க முட்டுப்படுபவனிடம்
வைத்தியசாலை வாசலில் நின்று
பிச்சை கேட்கிறான் ஒருத்தன்.

பெற்றவரும் மற்றவரும் நோயில் செத்துக்கொண்டிருக்க
கண்ணை மின்ன மின்ன
அதிசயப் பிராணிகளென
படம் பிடிக்கிறார்கள்
வேற்றுக்கிரகத்தால் நேற்று வந்த மனிதர்கள்.

தனியே சிரிப்பவர்களும்
வீதியில் கனாக்காண்பவர்களும்
கண்ணாமூச்சி விளையாடுபவர்களும்
கண்டுபிடிக்கப்படுபவர்களும்
இன்னும் நவீன பைத்தியக்காரராய்
உருமாறிக்கொண்டிருக்கிறார்கள்.

குழந்தைகளும் செல்லப்பிராணிகளும்
கூடவேஉள்ள
சொற்ப மனிதர்கள் தப்பித்துக் கொள்ள;
மின்னும் நகரம்
பைத்தியக்காரர்களால் நிரம்பியிருக்கிறது!
08/2012
--

15 கருத்துகள்:

  1. யாதார்த்தங்களை அழகாக அறைந்து சொல்கிறது கவிதை
    இந்த மாற்றங்களை உள்வாங்கிய என் சமூகம் நாளை என்னாகுமோ ?

    படம் பிடிக்கிறார்கள்
    வேற்றுக்கிரகத்தால் நேற்று வந்த மனிதர்கள்.
    இவர்கள் வேறு யாருமல்ல ......
    மனிதம் தொலைத்தவர்களே .................

    வாழ்த்துக்கள் சமகாலத்தை பதிவு செய்தமைக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.

      நீக்கு
  2. நிச்சயமான உண்மைகளை பேசுகிறிர்கள் .தொடருங்கள் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. அ.யேசுராசா மின்னஞ்சலில் எழுதியது.

      athanas jesurasa

      6:09 AM (0 minutes ago)

      to me
      கவிதை பிடித்தது.


      "கழுத்துப்பட்டி சப்பாத்து
      அட்டைகள் பத்திரங்களுடன்
      பூவரசவேலிக்குள் ஓடாகிப் போன மனிதர்களை
      ஏமாற்றப் புறப்படுகிறார்கள்
      இன்னுஞ்சிலர்."

      ஊரெங்கும் விரிந்து நடக்கும் , ஒழுங்கமைக்கப்பட்ட மோசடிகளின் வகைமாதிரி!
      - அ.யேசுராசா

      நீக்கு
    2. அ. யேசுராசா அவர்களுக்கு நன்றி.

      நீக்கு
  4. "..பெற்றவரும் மற்றவரும் நோயில் செத்துக்கொண்டிருக்க
    கண்ணை மின்ன மின்ன
    அதிசயப் பிராணிகளென
    படம் பிடிக்கிறார்கள்
    வேற்றுக்கிரகத்தால் நேற்று வந்த மனிதர்கள்.."
    உண்மையான கருத்தை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்

    பதிலளிநீக்கு
  5. vaazthukkaz,,,urakka uraittha kavithai varigaz,,,thodarattum.

    பதிலளிநீக்கு
  6. Jogeswari Sivapiragasam sjogeswari@yahoo.com

    3:43 AM (0 minutes ago)

    to me
    உண்மை ஒன்று நிமிர்கிறது

    பதிலளிநீக்கு
  7. பைத்தியம் திட்டமிட்டு திணிக்கப்படுகிறது.
    அழகான வாழ்க்கையை நவீனம் உறிஞ்சியெடுக்கிறது.
    அன்பு மட்டுமே தெரிந்த மனிதர்களின் மனசில்
    எல்லா நச்சுக்கொடிகளும் படரவிடப்படுகிறது.
    உணர்வுகளால் பின்னிக்கிடந்த கிராமங்களெல்லாம்
    உயிர்வலிக்க உயிர்வலிக்க உருமாறுகிறது.
    கரம்....ரகம்...என ஆக்கப்படுகிறது.
    ந..கரம்...ந..ரகம்...என்றாகி கசக்கிறது.

    அந்த நிஜங்களின் நிதர்சனங்களை
    புரியவைக்கிறது இந்த நகரம் கவிதை.

    பதிலளிநீக்கு
  8. உண்மையை வித்தியாசமாக சொல்கிறார்.

    பதிலளிநீக்கு