ஏப்ரல் 09, 2011

அம்மாவிடம் சேகரமாகிய முத்தங்கள்


-துவாரகன்

நேற்றும்கூட
என் அம்மா
எனக்காக ஒருபிடி திரளைச்சோறு
குழைத்து வைத்திருந்தாள்
நான் வருவேனென்று.

அவளிடம் சேகரமாயிருக்கும்
எண்ணங்களுக்கு வார்த்தைகளேயில்லை.
எல்லாப் பாரத்துக்கும்
அவளே சுமைதாங்கி

அப்பாவின் உயர்வில் கோபம்கொண்டே
அவர்கள்
எங்கள் வீடு
அடித்து உடைத்து
போத்தலால் அப்பாவைக் காயப்படுத்தி
அம்மாவும் நாரியில் அடிவாங்கி அலறியபோது
வேலிப்பொட்டால்
எங்களை இழுத்துக் காத்த
'பெரியமாமி' சொல்லக் கேட்டிருக்கிறேன்.
பெற்றெடுத்த கணத்திலும் முன்பு
எங்களுக்காய் சேகரித்து வைத்திருந்த
முத்தங்கள் பற்றி.

தாம் சொல்வது பொய்யெனத் தெரிந்தும்
ஆயிரம் வார்த்தைகள் கூறியும் காத்திடுவர்
எங்கள் தாயர்.
ஊரானுக்கு ஊதாரியென்றாலும்
அவளுக்கு உயிர்க்கொடி.
நள்ளிருளிலும் தனித்திருந்து கலங்குவாள்.
தாய்மைக்கு வார்த்தைகளேது?

எங்கள் தாயரைப்போலவே
என் அம்மாவின் புன்னகை அழகு
அவளின் அழுக்கு அழகு
அவளின் மனசு அழகு
எங்கள் தாயரின் காலங்கள் புனிதமானவை.

இப்போ எங்கள் சின்னத்தாயர்
இந்தப் புன்னகைகளை எல்லாம்
குப்பைக்கூடையில் தூக்கிஎறிந்துவிட்டு
சென்று கொண்டிருக்கிறார்
தாயாக அல்ல தெருநாயாக…பேயாக…
04/2011

2 கருத்துகள்:

 1. துவாரகன்.
  தாய் எனும் சொந்தம் யாவர்க்கும் பொதுவானதே.அவரவர் மொழிகளின் மூலம் சொல்கையில் அவை தருகின்ற நெருக்கம் வித்தியாசமானவை.
  அற்புதம்.
  மொழியின் ஆளுமை ,கற்பனை உன்னதம். கவிதை வாசகனுக்குள் இறங்கும் போது அவனுள் விதைக்கின்ற இனம் புரியாத நிகழ்வு நிகழ்ந்துவிடுகிறது. அனுபவிக்கும் போது அனுபவித்தவனின் வலிகள் அதிகம் எனினும் அதன் சுகானுபவம் சொல்லி மாளாது.
  வாழ்த்துக்கள்.
  முல்லைஅமுதன்

  பதிலளிநீக்கு
 2. நன்றி முல்லை அமுதன். எல்லா மனிதர்களுக்குள்ளும் தாய்மையின் அன்பும் அதன் வாழ்க்கைப் பரிமாணங்களும் ஓடிக்கொண்டே இருக்கின்றன.

  இன்று வீதிகளிலும் வெளிகளிலும் நடைபெறுகின்ற சம்பவங்களைக் கேள்விப்படுகின்றபோது பார்க்கின்றபோது என் உள்ளத்தில் பட்டதை எழுதினேன்.

  ஆனாலும் கவிதை எழுதும்வரை நினைக்காத பல வருடங்களுக்கு முன்னர் என் பெற்றோருக்கு நிகழ்ந்த சம்பவங்கள் எல்லாம் ஏனோ தெரியாது அடிமனதில் இருந்து குதித்தோடி வந்துவிட்டன.

  பதிலளிநீக்கு