மார்ச் 26, 2011

அவளிடம் வார்த்தைகளைக் கடன்கேட்கிறார்கள்



-துவாரகன்

பரிபாஷைகளுடன் இருப்பவளிடம்
வார்த்தைகளைக் கடன்கேட்கிறார்கள்

உதிர்த்த ஒவ்வொரு வார்த்தைக்கும்
அளவுகோல் வைத்து ஆராய்ந்தவர்கள்
இப்போ உதிர்க்கும் வார்த்தைகளை
இரத்தினப் பெட்டிக்குள் பத்திரப்படுத்தி
சாமரம் வீசி
குதிரையில் ஏற்றிச்செல்லக்
காத்திருக்கிறார்கள்.

அவளின் வார்த்தைகள்
பறவைபோல் சிறகடிப்பவை
குழந்தைகளின்
வண்ணமயச் சட்டைகளில்
அழகுகாட்டக்கூடியவை

மனிதர்களின் வார்த்தைகள்
எப்போதும் தூலமானவை
பூடகமானவை
எப்போதும் பொய்யானவை
எந்நேரமும் கொல்லக்கூடியவை.

உயிர்வாழவைக்கும் வார்த்தைகள்
எங்கள் கடவுளரிடமும் இல்லை.

இப்போ தீர்மானமாயிற்று
மனிதர்களுக்கு
வார்த்தைகளைக்
கடன் கொடுப்பதைப் பார்க்கிலும்
ஒரு சிட்டுக்குருவிக்குக் கொடுக்கலாம் என்று.
03/2011
நன்றி : காற்றுவெளி

6 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரம், இன்று தான் உங்களின் வலைப் பூவை முதன் முதலாய் பார்த்தேன், ஒரு சில கவிதைகளைப் படித்தேன்.

    ஒரு பெண்ணின் வார்த்தைகளைப் பாடு பொருளாக்கி, கவிதை ஒவ்வோர் பந்தியிலும் ஒவ்வோர் விடயங்களை அழகாக முன்னிறுத்திச் செல்கிறது. முதல் பந்தியின் எமது கடந்த கால, நிகழ் கால விடயங்களையும், இரண்டாவது பந்தியில், அந்த வார்த்தை ஜாலக்காரர் எப்படியெல்லாம் மயக்கும் திறமை வாந்தவர்கள் என்பதையும் சுட்டியிருக்கிறீர்கள்.

    உயிர் வாழ வைக்கும் வார்த்தைகள்
    எங்கள் கடவுளரிடமு இல்லை//?
    ரசித்தேன், உணர்ந்தேன், ஒரு கணம் இப் பூடகமான மொழிக் கையாள்கையினை நினைத்து அகம் மகிழ்ந்தேன்.

    வார்த்தைகளால் ஏமாற்றப்படும் இவ் உலகில் பறவைகளுக்கு மட்டுமே மொழியிருப்பின் அது பயன்படும் எனும் வகையில் இக் கவிதை அமைந்துள்ளது.

    பதிலளிநீக்கு
  2. உங்கள் கருத்தை வாசித்து நானும் மகிழ்தேன் நண்பரே. மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து உரையாடுவோம்.

    பதிலளிநீக்கு
  3. அழகான எழுத்துநடை உங்களுடையது வார்த்தை யாலங்கள் தான் எத்தனை இன்று கொல்லும் வார்த்தைகள் எத்தனை சிந்திக்கவேண்டிய  விசயங்கள்,கடவுளும் என்ன செய்வார் வேடிக்கைபார்பதை தவிர இன்றுதான் உங்கள் வலைப்பதிவை பார்க்கமுடிந்தது  நிருபன் ஊடாக இனி தொடர்ந்து கைகுழுக்குவோம் வல்லைவெளியுடன்.

    பதிலளிநீக்கு
  4. மனிதர்களுக்கு வார்த்தைகளை கடன் கொடுப்பதைக் காட்டிலும் சிட்டுக்குருவிகளுக்குகொடுக்கலாம்.
    வாஸ்தவம்தான்.
    பல சமயங்களில் அப்படி நினைக்கத் தோணிவிடுகிற ஆபத்து நேர்ந்துவிடத்தான் செய்கிறது.

    பதிலளிநீக்கு
  5. நண்பர் நேசனின்(பிரான்ஸ்) வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  6. நண்பர் விமலனின் (விருதுநகர்) கருத்துக்கு மிக்க நன்றி. அதிகமான சந்தர்ப்பங்களில் நாம் சந்திக்கும் பலர் வார்த்தை தவறிவிடுகிறார்கள். அதனால் யாரை நம்புவது யாரை நம்பாமல் இருப்பது என்பதுதான் புரியவில்லை.

    பதிலளிநீக்கு