டிசம்பர் 20, 2010

சபிக்கப்பட்ட உலகு -1



-துவாரகன்-


மீளவும் பூச்சிகளும் பறவைகளும்
வாழும் உலகு எனக்காகச்
சபிக்கப்பட்டிருக்கிறது

எப்போதாவது ஒருமுறை வரும் வாகனத்தில்
ஒரு பயணத்திற்காகக் காத்திருத்தல்
வழமையாயிற்று

எத்தனை முறைதான் இப்படிச் சறுக்கி விழுவது?

அதிகமாக எல்லா அதிகார வர்க்கத்திற்கும்
மூளைப் பிசகு ஏற்பட்டிருக்க வேண்டும்?

சீறிவரும் வாகனத்தில் இருந்து
கண்ணாடிக் கதவு இறக்கி
சுட்டுவிரல் காட்டவும்
லாபத்தில் பங்குபோடவும்
நேரம் குறித்து வருவார்கள்.
கூடவே முதுகு சொறிய
கொஞ்சம் ஒட்டியிருக்கும்.

பூச்சிகளும் பறவைகளும் மிருகங்களுமே
வாழக்கூடிய வனவாசகத்தில்
பட்டரும் ஏசியும் நெற்வேர்க்கும் பயன்படுத்தலாம்
என ஆலோசனை கூறுகிறார்கள் மூளைகெட்டவர்கள்

மூன்று மணித்தியாலமாக
யாரோ ஒரு நல்லவனின் வருகைக்காக
பாசிபிடித்த மதகு ஒன்றில் குந்தியிருக்கிறேன்

வீதியை வெறிப்பதும்
குரங்குகளின் ஊஞ்சலை ரசிப்பதும்
பறவைகளின் கீச்சிடலும் பழக்கமாயிற்று

மழைபெய்து ஈரமாக்கிய கிரவல் மண்ணில்
மண்புழுக்கள் நெளிவதையும்
வாரடித்து ஓடிக்கொண்டிருக்கும் நீரில்
தத்தளித்துக் கொண்டிருக்கும் எறும்புகளையும்
இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறேன்

இந்த உலகில் வாழச் சபிக்கப்பட்ட
என்னைப் பார்த்து வாலாட்டிக் கொண்டு
ஒரு கண்டன்கறுவல் வீதியைக் குறுக்கறுக்கிறது
241120100131
*கண்டன்கறுவல் - ஒரு வகைப் பாம்பு

7 கருத்துகள்:

  1. நல்லா இருக்கு துவாரகன்.
    உங்கள் தளம் படிக்கிறேன்.
    தொடர்ந்து எழுதுங்கள்.

    இணைப்பை அனுப்பியதற்கு
    நன்றிகள்.
    றியாஸ் குரானா

    பதிலளிநீக்கு
  2. நன்றி றியாஸ் குரானா. உங்கள் மாற்றுப்பிரதிக்கு எனது வலைப்பதிவிலும் இணைப்புக் கொடுத்துள்ளேன்.

    பதிலளிநீக்கு
  3. உணர்வோட்டமுள்ள நல்ல கவிதை.
    "..தத்தளித்துக் கொண்டிருக்கும் எறும்புகளானது.." சாதாரமானவன் வாழ்க்கை.

    பதிலளிநீக்கு
  4. சரியாகச் சொன்னீர்கள் டொக்டர். மண்புழுக்களும் எறும்புகளும் எங்கள் வாழ்க்கையை எங்களுக்கு குறியீடாகச் சொல்கின்றனவோ?

    பதிலளிநீக்கு
  5. அன்பின் துவாரகன்.
    கவிதை நன்று.
    வாழ்வியல் அனுபவம் கவிதையாய் அமைந்திருக்கிறது.
    காற்றுவெளியும் பெருமை கொள்கிறது.
    வாழ்த்துக்கள்.
    நட்புஅடன்.
    முல்லைஅமுதன்

    பதிலளிநீக்கு