டிசம்பர் 25, 2009

சர்க்கஸ் கோமாளிகளும் சனங்களும்


-----துவாரகன்

முகப்பூச்சு வேடஉடை ஒப்பனையுடன்
கோமாளிகள் கூத்துத் தொடங்கிவிட்டார்கள்

கூடாரமடித்து
மேளம் கொட்டி
சனத்தைக்கூட்டி
கோமாளிகள் கூத்துத் தொடங்கிவிட்டார்கள்

கோமாளிகளின் கூத்தைப் பார்ப்பதற்கு
யாருக்குத்தான் ஆசையில்லை?
கண்கள் விரித்து ஆச்சரியப்படுகிறார்கள்
கைகொட்டிச் சிரித்து ஆரவாரிக்கிறார்கள்

கயிற்றில் தொங்கும் கோமாளியின்
காற்சட்டையைக் கழற்றுகிறான் ஒரு கோமாளி
கொட்டாவி விட்டவனின் வாயில்
கையோட்டுகிறான் இன்னொரு கோமாளி
பீப்பாவில் வைத்து உருட்டித் தள்ளுகிறான்
மற்றொரு கோமாளி
எல்லாக் கோமாளிகளும்
குரங்குகள் போல் குத்துக்கரணமும் அடிக்கிறார்கள்

கோமாளிகளின் கூத்தைப் பார்த்து
சனங்கள் சிரிக்கிறார்கள்
கோமாளிகளின் கூத்தைப் பார்த்து
சனங்கள் கைகொட்டுகிறார்கள்
கோமாளிகளின் கூத்தைப் பார்த்து
சனங்கள் காசு கொடுக்கிறார்கள்

கூத்து முடிய
கோமாளிகள்
வேடஉடை கழற்றுவர்
வெளியே வருவர்
இன்னும் கூத்துத் தொடரும் என்பர்

கண்கள் விரிய
கைகொட்டிச் சத்தமிட்டு
காசு கொடுப்பதற்கு
இன்னும் இன்னும்
இந்த ஏமாளிச் சனங்கள்
காத்திருக்கிறார்கள்
211220090717

2 கருத்துகள்:

 1. போருக்குப் பின்னான அரசியலின் அபத்த முகங்களைக் கிழித்துக் காட்டும் இக்கவிதை ஈழச்சனங்கள் இன்னமும் சுயநல அரசியலை ரசிக்கக் காத்திருப்பதையும் புலப்படுத்துகிறது. இக்கவிதை அரசியல் லாபம் பெறவிளையும் அரசியல்வாதிகளையும் லாபமற்ற ரசிப்பை வெறுமையெனினும் ஏற்கத் தயாரான சனங்களின் மனவெளியையும் படம்பிடிக்கிறது.

  துவாரகனின் ஏனைய கவிதைகள் போலவே இக்கவிதையும் நவீன கவிதைக்கேற்ற இயல்பான மொழிதலில் வெளிவந்துள்ளது. வாழ்த்துக்கள்.

  செ. சுதர்சன்; பேராதனை.
  http://www.moochchu.blogspot.com/

  பதிலளிநீக்கு
 2. கவிதை பற்றிய கருத்துக்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு